LOADING

Type to search

இந்திய அரசியல்

“தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Share

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

     காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த உச்சி மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.

கால நிலை மாற்றத்தை கல்வி மூலம் புகட்ட அரசு திட்டமிட்டுள்ளது. காலநிலைக்கு என்று கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டுச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும். வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 4 லட்சம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை சமாளித்து மீண்டெக்கக்கூடிய சமூகமாக வளர வேண்டும். உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்கொள்ள மக்கள் அது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேளாண், நீர்வளத் துறைக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.