மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
Share
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவை முன்னிட்டு சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இந்த நிலையில், மகா கும்பமேளாவையொட்டி பிரதமர் மோடி பிரக்யாராஜ் நகருக்கு வருகை தந்தார். பிரதமர் மோடி காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி கும்பமேளா நடைபெறும் பகுதியில் காவல்துறை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.