“வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம் தமிழ்நாட்டை வாழவைப்பது திமுகவின் வழக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Share

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
நம் உயிரினும் மேலான தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கருணாநிதியால் பேணிப் பாதுகாக்கப்பட்டு, அவர்தம் தொண்டர்களால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ். நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டதால், நிரந்தர ஓய்வெடுக்க அலைகள் தாலாட்டும் வங்கக் கடற்கரைக்கு நம் தங்கத் தலைவர் சென்றபிறகு, அவருடைய அன்பு தொண்டர்களான நீங்கள், கட்சித் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தினீர்கள். கட்சியைத் தோளிலும், தலைவர் கருணாநிதியையும், அவருடைய தொண்டர்களாகிய உங்களையும் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன். இடைத்தேர்தல் பணிகளைக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தோழமைக் கட்சிப் பிரமுகர்களும் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் திமுக அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அவை உரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். பிப்ரவரி 6, 7 தேதிகளில் அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளுக்காகவும், கழக நிர்வாகிகள் – தொண்டர்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் நெல்லை மாவட்டத்திற்கு உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பணம் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.
ஒவ்வொரு மாவட்டமாக நடைபெறும் ஆய்வுப் பணிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்புக்காக அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் வகையிலே மக்களின் பேரன்பும், தாய்மார்களின் பாசமும், தொண்டர்களின் கொள்கை உணர்வும் பொங்கிப் பெருகுவதைக் காண்கிறேன். அதில் நெல்லைப் பயணம் மிகுந்த உற்சாகத்தை எனக்கு அளித்துள்ளது. வழிநெடுகத் திரண்டிருந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள் சகோதரப் பாசத்துடன் அன்பைப் பொழிந்து அகம் மகிழச் செய்தனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சீர் செய்கிற அண்ணனாக, விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தங்கள் வேலை சார்ந்த பயணத்தை எளிதாக்கிய சகோதரனாக என் மீது அவர்கள் அன்பு காட்டினார்கள். மாணவியர் பலரும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பியதுடன், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகக் அரசு இருப்பதால், மாணவிகள் பலரும் திட்டங்களின் பெயர்களைச் சொல்லி, “இவையெல்லாம் எங்களுக்கு ரொம்பவும் பலன் தருகிறது” என்று தெரிவித்ததைக் கேட்டதைவிட, உங்களில் ஒருவனான எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்? “அப்பா.. அப்பா..” என்று மாணவிகள் காட்டிய பாசத்தின்போது, அவர்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம்தான் திமுக ஆட்சியின் ஒரே இலட்சியம் என்ற மன உறுதியையும் பெற்றேன். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் குழுமத்தின் சேலார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையில் தமிழ்நாடு புதிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருப்பதுடன், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 4000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அமையும் நல்ல சூழலும் உருவாகியுள்ளது.
அரசு நலத்திட்ட விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1304.66 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 23 பணிகளைத் தொடங்கி வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நெல்லை மக்களின் நலன் காப்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பதைச் சொல்லால் மட்டுமின்றி செயலாலும் மெய்ப்பித்துள்ளேன், உங்களில் ஒருவனான நான்.
மாவட்டக் கழகத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சார்ந்தவர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் என நெல்லை மாவட்ட உடன்பிறப்புகளைச் சந்தித்து அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு செய்தபோது, ஆட்சியின் அடித்தளமாக இருக்கின்ற கட்சியின் செயல்வீரர்களில் ஆற்றல் மிக்கவர்களை அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள முடிந்ததது. ஆற்றல்மிக்கவர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டால் நெல்லை மாவட்டம் என்றும் திமுக கோட்டையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் – செயல்வீரர்கள் – தொண்டர்கள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், கழகத்தின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமாருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் இருநூறு – படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். ‘இருநூறு இலக்கு’ என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திமுக அரசு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.
மத்திய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கட்சியினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திமுக அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது திமுகவின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும். மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.க முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது. இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.க அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்”. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.