பாரதியின் மறைவு தமிழ் ஊடகதுறைக்கு பேரிழப்பு என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்
Share

மூத்த பத்திரிகையாளர் இராசநாயகம் பாரதியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். தமிழ் தேசியத்தின்பால் தீவிர ஈடுபாடு கொண்டு செயற்பட்ட போராளியாகவே பாரதி திகழ்ந்திருந்தார். தமிழ் கூறும் நல்லுலகத்தின் பெரும் இடைவெளியை பாரதியின் இழப்பு ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஞாயிறு தினக்குரல் , தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும், வீரகேசரி வடபிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர் இராசநாயகம் பாரதியின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காகவும் தமிழ் பேசும் ஊடகவிலயாளர்களின் உரிமைக்காகவும் தமிழ் தேசியத்தின் குரலாகவும் செயற்பட்டு வந்த பாரதியின் மறைவானது தமிழ் ஊடகத்துறை தளத்தில் பேரிடைவெளியை ஏற்படுத்தியிருக்கின்றது.
1980களில் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பாரதி கடந்த 35 வருட காலங்களுக்கும்மேலாக பத்திரிகைதுறையில் பணியாற்றியுள்ளார். யுத்தகாலத்தில் பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ் தேசியத்தின் பால் நின்று செயற்பட்ட போராளியாகவே அவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
தமிழ் ஊடகத்துறையானது பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய காலத்தில் ஊடகத்துறையின் சுதந்திரத்துக்காக அவர் துணிந்து செயற்பட்டிருந்தார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி ஒன்றியத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஒன்றியத்தின் வளர்ச்சியில் அக்கறை காண்பித்து வந்த பாரதி தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக செயற்பட்டவராவார்.
இறுதி யுத்தகாலத்தில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியபோது ஏனைய ஊடக அமைப்புக்களுடன் இணைந்து ஒன்றியமும் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்திருந்தார். ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பூரண ஒத்துழைப்புக்களையும் அவர் வழங்கியிருந்தார். சகோதர ஊடக அமைப்பின் பிரதிநிதிகளுடனும் அவர் நல்லுறவை பேணியதுடன் தமிழ் ஊடகவியலாளரின் நலன்கள் தொடர்பில் தீவிர அக்கறையினை செலுத்தி வந்தவராவார்.
தமிழ் ஊடகத்துறை பரப்பில் இளம் பத்திரிகையாளர்களை பயிற்றுவிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்திருந்தார். யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கை நிறுவகத்தில் அவர் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார். பல்வேறு ஊடக கற்கை நிறுவனங்களிலும் அவர் கற்பித்திருந்தார்.
இவ்வாறு தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காகவும் சுதந்திரத்துக்காகவும் தமிழ் தேசியத்துக்காவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்திருந்த பாரதியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.