LOADING

Type to search

உலக அரசியல்

பிரிக்ஸ் நாடுகள் வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிந்துவிட்டன – டிரம்ப்

Share

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிரடி பொருளாதார நடவடிக்கைகளால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன. அவரது நடவடிக்கை வர்த்தக போர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய வர்த்தக பரிவர்த்தனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் புதிய கரன்சியை உருவாக்க ஆலோசனை மேற்கொண்டன. ஆனால், டாலரை விட்டு வெளியேற முயற்சிக்கும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தார். ‘பிரிக்ஸ் கரன்சி திட்டம் ஒரு மோசமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. அதில் உள்ள நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அதை விரும்பவில்லை. அவர்கள் இப்போது அதைப் பற்றி பேசக்கூட விரும்பவில்லை. பேசவும் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் டாலரை வைத்து விளையாட விரும்பினால், 100 சதவீத வரியால் பாதிக்கப்படுவார்கள்’ என்று டிரம்ப் பேசியிருந்தார். இதனையடுத்து பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய கரன்சி தொடர்பாக எந்த பதிவேற்றத்தையும் வெளியிடவில்லை. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் முயற்சி தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பிரிக்ஸ் நாடுகள் எங்களின் டாலரின் மதிப்பை குறைத்து அழிக்க முயற்சி செய்தன. அவர்கள் ஒரு புதிய கரன்சியை உருவாக்க விரும்பினார்கள். அதனால் நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டேன். டாலரை அழிக்க முயற்சிக்கும் எந்தவொரு பிரிக்ஸ் நாட்டிற்கும் 150 சதவீத வரி விதிக்கப்படும், உங்கள் நாடுகளின் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கூறினேன். இப்போது பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டன. அவர்களுக்கு என்ன ஆனது என எனக்குத் தெரியவில்லை. சமீப காலமாக பிரிக்ஸ் நாடுகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இது அற்புதமான திருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.