இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம்
Share

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
இந்நிலையில் காஷ் படேல் அடுத்த எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது. இதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். அமெரிக்க செனட் சபை இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குடியரசுக் கட்சி மீதான அவரது இரும்புப் பிடியை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக, தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை டிரம்ப் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் முதன்மை சட்டம்- ஒழுங்கு அமைப்பான எப்.பி.ஐ.-யின் இயக்குநராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை அவர் நியமனம் செய்திருந்தார். கடந்த 2016-இல் நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினார். இவர், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார்.