3 லட்சம் பேருக்கு கட்சியில் முக்கிய பதவி – விஜய் அதிரடி
Share

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் வருகிற 26-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். 26-ந்தேதி காலை 10 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவில் கட்சித்தலைவர் விஜய் சிறப்புரை நிகழ்த்துகிறார். அப்போது விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்கிற தேதியையும் அவர் அறிவிக்க உள்ளார்.
இந்த ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச்சீட்டு இருப்பவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்துவதற்காக கட்சியில் 3 லட்சம் பேருக்கு முக்கிய பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பையும் ஆண்டு விழாவில் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.