தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த தவறியுள்ளது
Share

மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு.
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த தவறியுள்ளது.என மன்னார் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் 24ம் திகதி திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.இலங்கை அரசை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிற நிலையிலே இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
குறித்த கைது நடவடிக்கைகள் ஊடாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை கட்டுப்படுத்தப் படுகின்றதா? என்ற விடையம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.நாங்கள் தொடர்ந்தும் இந்திய மீனவர்களுக்கு தெரிவித்து வருகின்றோர்.தொடர்ந்தும் எமது கடல் எல்லையை தாண்டி வராதீர்கள், என்ற விடையத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளோம்.
இந்திய அரசுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம்.தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த தவறியுள்ளது.
எல்லை தாண்டும் சம்பவத்தை மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் மீன் பிடி சிட்டையில் குறிப்பிட்டுள்ளார்கள் இந்திய கடல் எல்லையை தாண்டாதீர்கள் என்று.ஆனால் அவர்கள் விதி முறைகளை மீறி இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் எல்லையில் வந்து எமது கரையோர பகுதிகளில் மீன் பிடித்து விட்டுச் செல்கின்றனர்.
அத்துடன் மீறி நுழைகின்ற நிலையிலே தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படுகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த 32 மீனவர்களின் நிலையை நாங்கள் நினைக்கின்ற போது உண்மையில் வேதனையாகவே உள்ளது.சக மீனவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் கைதிற்கு நாங்கள் வேதனை அடைகிறோம்.
எனினும் கடற்படை முன்னெடுக்கும் கைது நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்க முடியாது.குறித்த நடவடிக்கை மூலமாகவே எமது கடல் வளத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.கடற்படையினர் இரவு பகல் பாராது எமது கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அவர்களுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழக அரசு மீனவர்கள் விடையத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.எல்லை தாண்டு வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு தமிழக அரசு தண்டனை வழங்க வேண்டும்.எதிர்காலத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதை விடுத்து எல்லை தாண்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
எதிர் காலத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப் படும் சம்பவங்கள் இல்லாமல் போக வேண்டும்.அதற்கான தீர்வு இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையை தாண்டாமல் இருப்பதே ஒரே தீர்வு ..அவர்கள் இத் தொழில் முறையை கை விட்டு,இலங்கை எல்லையை தாண்டுவதையும் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது மன்னார் பனங்கட்டுகொட்டு மீனவ சங்கத்தின் பொது முகாமையாளர் அன்ரனி சங்கர், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் பிரதேச சமாச தலைவர் அகஸ்டஸ் றோச் ஆகியோரும் கலந்து கொண்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.