LOADING

Type to search

இந்திய அரசியல்

‘கல்வியும், மருத்துவமும்தான் அரசின் இரு கண்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Share

கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரண்டு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள “முதல்வர் மருந்தகம்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள 51 “முதல்வர் மருந்தகம்” திறக்கப்பட்டது. மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள “முதல்வர் மருந்தகம்” அமைந்துள்ள இடத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசியவர், “மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றுவதற்காக முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு சார்பில் மானியம், கடன் உதவி வழங்கப்படுகிறது.

1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்ததால் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெனரிக் மருந்துகளையும் மற்ற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. திமுக அரசு சாதாரண சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கான எடுத்துக்காட்டு தான் முதல்வர் மருந்தகங்கள். மருந்துகள் வாங்க அதிகமாக செலவாகிறது என பலர் தெரிவித்ததால் சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மருந்து கிடங்குகளில் இருந்து 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 48 மணி நேரத்தில் மருந்துகளை முதல்வர் மருந்தகத்திற்கு அனுப்ப வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும். பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளது. கல்வியும், மருத்துவமும் தான் திமுக அரசின் இரு கண்கள். கல்வியில் சிறந்த மாநிலமாகவும், சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்க திட்டம். கொரோனா காலத்தில் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு மக்களை காப்பாற்றினோம். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் காலத்தை மாற்றி மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு சென்றோம். மக்களுக்கான செலவுகளை செய்வதில் கணக்கு பார்ப்பதில்லை. மத்திய அரசின் நெருக்கடி இருந்தாலும் அதை பத்தி கவலைப்படாமல் தமிழ்நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.