டிராகன் படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் – பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி பதிவு
Share

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் டிராகன். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும், இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டில் பெரும் வசூல் முழுவதும் நிறுவனத்திற்கு போனஸ் தான் என்றும் தெரிவித்து இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “டிராகன் மிக அழகான திரைப்படம். அருமையான எழுத்துக்கள் – இயக்குநருக்கு பாராட்டுக்கள். அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும், முழுமையாகவும் இருந்தது.” “பிரதீப் ரங்கநாதன் தான் ஒரு அசாத்திய எண்டர்டெயினர் என்பதை வெளிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் திறமையான நடிகர் என்பதையும் உணர்த்தி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.” “அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். கடைசி 20 நிமிடங்கள் என் கண்களை கலங்க செய்துவிட்டது. அதிகரித்து வரும் ஏமாற்று வேலைகள் நிறைந்த உலகில், இது மிகவும் அவசியமான தகவல். ஏஜிஎஸ் புரொடக்ஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்,” என குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ஷங்கரின் பதிவுக்கு பதில் எழுதிய பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தளத்தில், “சார், உங்கள் திரைப்படங்களை பார்த்தே வளர்ந்து, உங்களை ரசித்து, உங்களை உற்று நோக்கி வந்த ஒரு பேன் பாய் இத்தனை வாழ்த்துக்களை பெறுவதை நினைத்தும் பார்க்கவில்லை. நீங்கள் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்) என்னை பற்றி பேசியது நம்ப முடியாத கனவு. என் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. ரொம்ப நன்றி சார். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.