LOADING

Type to search

இலங்கை அரசியல்

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் கதியை அறியாமலேயே வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த மற்றுமொரு தமிழ்த் தாய் காலமானார்

Share

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தமிழ்த் தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைக் கண்டுபிடிக்க சுமார் 3,000 நாட்கள் போராட்ட களத்தை ஆக்கிரமித்த ‘மாரியம்மா’ என அழைக்கப்படும் வேலுசாமி மாரி, தனது 79ஆவது வயதில் 24ம் திகதி திங்கட்கிழமை தினம் (பெப்ரவரி 24) காலமானார்.

வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் காணாமல் போனதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 2009 இல் உள்நாட்டுப் போர் இரத்தக்களரியுடன் முடிவடைந்ததிலிருந்து, தமது கணவர், மகள்கள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களை தமிழர் தாயகப் பிரதேச மக்கள் தேடி வருவதோடு, பெப்ரவரி 20, 2017 முதல் எட்டு வருடங்களைக் கடந்து போராடும் பெற்றோர்களில் குறைந்தது 350 பேர் இறந்துள்ளனர்.

தமது அன்புக்குரியவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தக் கோரி, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்துடன் தமிழ்த் தாய்மார்கள் முன்னெடுத்த போராட்டம் அண்மைக்கால வரலாற்றில் தெற்காசியாவின் மிக நீண்ட போராட்டமாக கருதப்படுகிறது.

தமிழ்த் தாய்மார்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்ததன் பின்னர் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தால் (OMP) கடந்த 7 வருடங்களாக ஒரு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தலைவிதியையேனும் வெளிப்படுத்த முடியவில்லை.

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியை வழங்குவதற்கான எந்த சமிக்ஞையையும் வெளியிடவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு குழுவில் (CEDAW) பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுடறிய போராடும் தமிழ் தாய்மார்கள் பற்றி எதுவும் கூறவில்லை.

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தண்டனையின்மையை அனுபவிக்கவும் வரப்பிரசாதங்களைப் பெறவும் அனுமதித்தமைக்காக நாட்டை ஆளும் அரசாங்கங்கள் சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டுள்ளன.