வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் அமுதா நியமனம்
Share

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.