ஐநா கூட்டத் தொடர் : எதுவும் மாறவில்லை ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share

தமிழரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்பு முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த ஒரு காலச் சூழலில்,ஐநாவின் 58ஆவது கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது.
கடந்த சில ஆண்டுகளாக ஐநாவின் மீதான தமிழ் மக்களின் கவனக்குவிப்பு ஒப்பீட்டளவில் குறைந்து வருகிறது. ஐநாவிற்குச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் தொகையும் குறைந்து விட்டது. உள்நாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கிக் கவனத்தைச் செலுத்த வேண்டியிருப்பது மட்டும் ஒரு காரணம் அல்ல. ஐநாவை கையாள்வதற்கான பொதுப் பொறிமுறை எதுவும் தமிழ் மக்களிடம் இல்லை. ஒரு பொறிமுறை இருந்தால்தான் அது தொடர்ச்சியாக இயங்கும். இல்லை என்றால் எல்லாமே கட்சிகளின் அல்லது தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களின் உதிரியான நடவடிக்கைகளாகச் சுருங்கிவிடும்.
நடப்பு ஐநா கூட்டத்தொடரில் இலங்கைத் தீவில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் கடந்த 25ஆம் திகதி உரை நிகழ்த்தியிருந்தார். அதன் பின் கடந்த மூன்றாம் தேதி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் வாசிக்கப்பட்டது.
இம்முறை ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு.
முதலாவது முக்கியத்துவம்.உள்நாட்டில் ஒரு புதிய அரசாங்கம் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கமானது தமிழ் மக்களின் ஆணையும் தனக்கு உண்டு என்று கூறுகிறது. விஜித ஹேரத் தனது உரையில் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு முயற்சிகளில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் தன்னை வெளி உலகத்திற்கு காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இது முதலாவது, உள்நாட்டு முக்கியத்துவம்.
அடுத்தது பிராந்திய முக்கியத்துவம். சீன இடதுசாரி மரபில் வந்த ஒரு இயக்கம் இப்பொழுது இலங்கைத் தீவில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதலாளித்துவம் உலகின் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீமையாக எழுச்சி பெற்ற பின்னர் தென்னாசியாவில் இடதுசாரி வேர்களைக் கொண்ட ஒரு அமைப்பு இவ்வாறு ஆட்சிக்கு வந்திருப்பது என்பது ஒரு மாற்றம். சீனா இந்த அரசாங்கத்தை இலகுவாகக் கையாளலாம் என்று நம்புகின்றது. அதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ; சீனாவுக்கும் இடையிலான புதிய பிராந்தியப் போட்டிகளுக்கு அது காரணமாக அமையுமா? என்ற கேள்வி பலமாக உண்டு.
மூன்றாவது, அனைத்துலக முக்கியத்துவம். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியிருக்கிறது. புதிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழமையான ராஜதந்திர வழிமுறைகளுக்குக் கட்டுப்படாதவராகக் காணப்படுகிறார். அவருடைய வழமைக்கு மாறான நடவடிக்கைகளால் உலகளாவிய அரசியல் நிகழ்வுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்.
மேற்கண்ட மூன்று மாற்றங்களின் பின்னணியில், 58ஆவது ஐநா கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்றாம் திகதி மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்ட அன்று, புலம்பெயர்ந்த தமிழர்கள் ஐநா முன்றலில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
எனினும் கடந்த 25ஆம் தேதி இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்த தகவல்களின்படி, ஐநா தீர்மானங்கள் தொடர்பாக அதாவது பொறுப்புக்கூறல் தொடர்பாக, இலங்கையின் அணுகுமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனென்றால், அனுர ஜனாதிபதி வேட்பாளராக இருந்த காலகட்டத்தில் அசோசியேற்றற் பிரஸ் என்ற ஊடகத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் அதைச் சுட்டிக் காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று கேட்கின்றார்களே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்பதாக அவருடைய பதில் அமைந்திருந்தது. அதே நிலைப்பாட்டைத்தான் மனித உரிமைகள் பேரவையில் அவருடைய வெளியுறவு அமைச்சரும் பிரதிபலித்திருக்கின்றார்.அதாவது அனைத்துலகப் பொறிமுறைகளை அரசாங்கம் நிராகரித்து விட்டது. அதே சமயம் உள்நாட்டுப் பொறிமுறைகளை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் இந்த உள்நாட்டுப் பொறிமுறைகளான காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்டவை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலும், 2021 இலிருந்து மூன்று ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. “சிறீலங்கா பொறுப்பு கூறலுக்கான நிகழ்ச்சி திட்டம் ( SriLanka Accountability Program – SLAP) என்று அழைக்கப்படுகின்ற இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்,போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களைக் கண்டறிவதற்கான சாட்சிகளும் சான்றுகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஒரு ஆண்டு மட்டுமே இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டு வருகிறது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்து விட்டது. தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஐநா விடயத்தில் எந்த ஒரு சிறு மாற்றத்தையுமே காட்டவில்லை.
விஜித ஹேரத் மனித உரிமைகள் பேரவையின் ஆசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரியை சந்தித்து அது தொடர்பான விபரங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை அவர் சந்தித்திருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் கடந்த மூன்றாம் திகதி வாசிக்கப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கையில் புதிய அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்காத வார்த்தைகளும் அணுகுமுறைகளும் உண்டு என்று அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கம் அதை நிராகரித்திருக்கிறது. இந்த விடயத்தில் தனக்கு முன் இருந்த அரசாங்கங்களின் பாதையில்தான் தேசிய மக்கள் சக்தியும் பயணிக்கின்றது.
யுத்த வெற்றி நாயகர்கள் ஆகிய படைத்தரப்பை விசாரிக்கவும் தண்டிக்கவும் அவர்கள் தயாரில்லை. அதாவது படைக்கட்டமைப்பை பகைத்துக் கொண்டு சமாதானத்தைக் கொண்டு வர அவர்கள் தயாரில்லை. அவர்களால் அது முடியாது. அனுர ஜனாதிபதியாக வர முன்பு அசோசியேற்றற் பிரசுக்கு வழங்கிய மேற்காணலில் கூறியது போல, அவர்கள் படையினரைத் தண்டிக்க மாட்டார்கள். அப்படி என்றால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் உண்மையை அறிய வேண்டும்? இங்கு உண்மை என்பது என்ன? குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது. குற்றவாளிகளை ஏன் கண்டுபிடிக்க வேண்டும்? அவர்களைத் தண்டிப்பதற்காக? அல்லது மன்னிப்பதற்கா? ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான வார்த்தைகளில் சொன்னால் “மீள நிகழாமை”(Non recurrence) அதாவது குற்றங்கள் “மீள நிகழ்வதை” எப்படித் தடுப்பது? தண்டிப்பதன் மூலமா? அல்லது மன்னிப்பதன் மூலமா?
இதுதான் பிரச்சினை. தேசிய மக்கள் சக்தியிடம் தமிழ் மக்கள் புதிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு நடந்து கொண்டிருக்கும் ஐநா கூட்டத்தொடர் ஆகப் பிந்திய உதாரணம் ஆகும். அதை இன்னும் அழுத்தமாகச் சொன்னால்,தையிட்டிக்கு பின்னரான உதாரணம் என்றும் சொல்லலாம்.
ஆனால் மற்றொரு அமைச்சராகிய லால் கந்த கூறுகிறார், அரசாங்கம்தான் மாறி இருக்கிறது தவிர அரசு மாறவில்லை என்று.அது கோட்பாடு ரீதியாகச் சரி. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நான்கு பிரதான மூலக்கூறுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்று மட்டும்தான் மாறக் கூடியது.எனையவை, படைக்கட்டமைப்பு, நீதிபரிபாலனக் கட்டமைப்பு, பௌத்த மகா சங்கம் ஆகியவை ஆகும். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அரசாங்கத்தைத் தவிர ஏனைய மூன்றும் மாறிலிகள். அரசாங்கங்கள் மாறும். ஆனால் அவை கூட மாறிலிகளின் கைதிகள்தான். இத்தகைய அர்த்தத்தில் கூறின் இலங்கைத் தீவில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசுக் கட்டமைப்பில் திருப்பகரமான மாற்றங்களுக்கு இடமில்லை. புத்த பகவான் மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்று சொன்னார். ஆனால் இலங்கை தீவின் தேரவாத பௌத்தத்தைப் பொறுத்தவரை மாற்றமின்மைதான் நிரந்தரமா?