அதிமுக வழக்கறிஞர் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Share

வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செங்கல்பட்டு நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளரும், கழக வழக்கறிஞருமான அனிருதன் இன்று காலை வழக்கம்போல், தனது வீட்டிலிருந்து கார் மூலம், செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் ராட்டினகிணறு என்ற இடத்தில் திமுக-வினர், வழக்கறிஞர் அனிருதன் காரை வழிமறித்து, காரை சேதப்படுத்தியதோடு, அவரையும் தாக்கியுள்ளனர்.
அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அனிருதனை மீட்டு, அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளரும், அதிமுக வழக்கறிஞருமான அனிருதன் மீது தாக்குதல் நடத்தியபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையினருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனிருதன் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.