LOADING

Type to search

கதிரோட்டடம்

முந்திக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் தனது ‘மூக்கை’ நுழைத்த ஒரு அனுபவமற்ற தமிழ் அரசியல்வாதி

Share

கதிரோட்டம்   08-01-2021

இலங்கையின் தற்போதைய கோட்டாபாய அரசில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஒருவரே கலாநிதி ராகவன் சுரேந்திரன் அவர்கள். அவர் தேடித் தேடி பல விடயங்களைக் கற்றுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் ஆகும்.

ஆதலினால்தான் அவரை முதலில் வட மாகாண ஆளுனராகப் நியமனம் செய்தது மைத்திரி அரசு. தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த கோட்டாபாய அரசானது தமிழ் மகன் என்பதாலும் கற்றவர் என்பதாலும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக நியமனம் செய்தார். புத்த சாசனங்கள் தொடர்பான துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றவர் என்ற விடயத்தை அறிந்த தமிழர்களும் சைவர்களும் வியந்து பாராட்டிய ஒரு விடயமானவே இருந்தது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போலவே தேடித் தேடி அறிவியலைக் கற்றுக்கொண்டவர் அரசியலில் நுழைந்த சில மாதங்களிலேயே இலங்கைப் பாராளுமன்றத்தில் முக்கியமான ஒரு உரையாற்ற முன்வந்தார். மேற்படி விடயமானது புலம் பெயர் தமிழ் மக்களுக்கு முக்கியமான ஒன்றே ஆகும்.
எமது கனடிய வாசகர்களும் இணைய வாசகர்களும் ஏற்கெனவே வாசித்தறிந்த விடயமே அது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினரானவுள்ள விஜேய் தணிகாசலம் அவர்கள் மாகாணப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஒரு பிரேரணையே அது.

இந்த மாகாணத்தில் பயிலுகின்ற அனைத்து மாணவ மாணவர்களும் மே மாதம் 18ம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்திற்கு ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரமாக’ மாகாண அரசால் அங்கீகரிக்கப்பெற்று அனைத்துப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படும் ஒரு அம்சமாக அமையப்போகின்றது.

இந்த விடயத்தை கனடாவில் வாழும் சிங்கள அமைப்புக்கள் சில இலங்கை அரசிற்கு எடுத்துச் செல்ல, “அதை நானே செய்கின்றேன்” என்று கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவருடைய உரையானது மிகுந்த அவசரத்தில் தயாரிக்கப்பெற்றுது என்புத நன்கு புலனாகியது. அதுவும் உள்நோக்கம் கொண்ட ஒன்றாகவே அமைந்தது. குறிப்பாக சகோதரர் விஜேய் தணிகாசலம் அவர்கள் பிறந்த ஊரை மிகவும் அழுத்தி உச்சரித்து (சிங்கள உறுப்பினர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்) பேசிய விடயம் எம்மை வெறுப்புக்குள் ஆழ்த்தியது என்பதை இந்த பக்கத்தில் பதிவு செய்கின்றோம். மேலும், கனடா வாழ் தமிழர்களையும், விஜேய் தணிகாசலம் போன்ற அரசியல்வாதிகளையும் அச்சுறுத்தும் வகையிலும் மன்றாடுவது போன்றும் இருந்ததும் இங்கு கவனிக்க வேண்டிய விடயங்களில சிலவாகும்.

மேலும் தனது உரையில் அவசரமும் பதட்டமும் காரணமாக முதலில் ஒன்றாரியோ ‘முதல்வர்’ டக்போர்ட் என்று குறிப்பிட்டவர் பின்னர் ஒன்றாரியோ ‘பிரதமர்’ என்று குறிப்பிட்டது போன்ற பல தவறுகள் அவரது உரையில் அகப்பட்டுக்கொள்ள, மிகவும் வெறுப்பை ஊட்டுவதாகவே இருந்ததை ஆயிரக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

ad