எதிரும் புதிரும் | கதிர் துரைசிங்கம்
Share
1. தாயகத்தில் பாடசாலை சென்று புத்தகங்கள் குறிப்புக்கள் பாராமல் மாணவர் பரீட்சை எழுத வேண்டும்.
கனடாவில் வீட்டில் இருந்து புத்தகங்கள், கணினி பார்த்து மாணவர்கள் பரீட்சை எழுதலாம்.
2. அங்கு window ஊடாக நிமிர்ந்து பார்த்துப் பழகிய பெண்களை மணமேடைக்கு வரும்போது குனிய வைப்பது சிரமம்.
இங்கு window வைக் குனிந்தபடி பார்க்கப் பழகிய பெண்களை மணமேடைக்கு வரும் போது தலைநிமிர வைப்பது சிரமம்.
3. அங்கு வீட்டோடை மாப்பிள்ளையை பெண்களின் பெற்றோர் விரும்பினார்கள்.
இங்கு “வீட்டோடை” மாப்பிள்ளையை மணப்பெண் விரும்புகின்றாள்.
4. அங்கு தந்தி ஒன்று வந்தால் முதலில் ஞாபகத்திற்கு வருவது மரணம்.
இங்கு தந்திக்கே மரணம் வந்துவிட்டது.
5. அங்கு இலவசமாக தமிழ்ப் பத்திரிகையை பெற முடியாது.
இங்கு பணம் கொடுத்து வாங்கத் தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இல்லை.
6. அங்கு ஒரு இடத்தைச் சொல்லி அது எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டால் இத்தனை மைல் என்று பதில் கிடைக்கும்.
இங்கு ஒரு இடத்தைச் சொல்லி அது எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டால் இத்தனை நிமிடங்களில் அல்லது இத்தனை மணித்தியாலங்களில் என்று பதில் கிடைக்கும்.
7. அங்கு சண்டை பிடிப்பவர்களைப் பார்த்து “விளையாட்டாக எடுங்கோ” என்று மூத்தோர் புத்திமதி சொல்வார்கள்.
இங்கு அனேகமான விளையாட்டுக்கள் சண்டையில் முடிகின்றன.
8. அங்கு 11 பேர் ஒருபந்தைக் கால்களால் அடித்து விளையாடுவது Football
இங்கு மேலும் 4 பேரைச் சேர்த்து 15 பேர் ஒரு பந்தைக் கையாலும் காலாலும் விளையாடுவதும் Football தான்.
9. அங்கு மடிமேல் தலைவைத்து தாலாட்டி வளர்த்த அன்னையின் இறுதிக் கிரியைகளை
இங்கு மடிக்கணினியில் பார்த்து ஆறுதல் அடைகின்றார்கள்
10. அங்கு எல்லைகளால் (வேலிகளால்) பிரச்சினை.
இங்கு பிரச்சினைகளுக்கு எல்லையே இல்லை.