இலங்கை அரசின் மதவாதப் போக்கிற்கு எதிராகக் குரல் எழுப்பும் எழுச்சிமிக்க பேராயர்
Share
05-11-2021 கதிரோட்டம்
இலங்கையில் இனவாதத்தை கையில் எடுத்த வண்ணம் அரசியல் என்று தளத்திலும் அரசாங்கம் என்ற மேடையிலும் அலங்காரமாக காட்சி தரும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிய இதுவரை காத்திரமானவர்கள் எவரும் எழுந்து நின்று கைகளை உயர்த்திப் பேசவில்லை.
ஆனால் தற்போது இலங்கையின் தலைநகர்ப் பகுதியிலிருந்து ஆட்சி பீடத்திற்கு எதிராக உரத்த குரலொன்று கேட்கத் தொடங்கியுள்ளது. அவர் தான் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்கள்.
இலங்கையில் அவ்வப்போது பேரினவாதிகளால் கொழுந்து விட்டு எரியச் செய்யும் இனவாத அல்லது மதவாத தீயில் உடல்கருகி தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் இலட்சக் கணக்கில் அடங்குவார்கள். குறிப்பாக இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமியர்களின் இல்லங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்களும் சொத்துக்களின் இழப்புக்களும் கணக்கில் அடங்காதவை.
இதைப் போன்றே. இந்துக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஏராளம். எத்தனை ஆயிரம் இந்து ஆலயங்கள் எரிக்கப்பட்டும் இடித்தழிக்கப்பட்டும் போயின என்பதன் கணக்குகள் இலங்கையின் இந்து விவகார அமைச்சில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறே. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதும் பாதுகாப்பு தரப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் தங்களது பாதுகாப்பினை மட்டும் உறுதி செய்து கொண்டார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த கட்டுவாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து மேலும் தெரிவித்த அவர்,
தாக்குதல் நடைபெற்ற போது மைத்திரிபால சிறிசேனவும், பாதுகாப்பு தரப்பினரும் தங்கள் பாதுகாப்பினை மட்டும் கருத்தில் கொண்டு செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு இடையே மட்டும் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர் எனவும் தெரிவித்தார்.
இந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த ஆணைக்குழுவுக்காக 600 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல் படுத்தப்படாத காரணத்தினால் இந்தப் பணம் விரயமாகின்றது என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு தற்போதைய அரசின் அராஜகங்களுக்கு எதிராகவும் மைத்திரி – ரணில் கூட்டான குள்ளநரி வேலைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களுக்கு வடக்கு கிழக்கிலிருந்தும் ஆதரவு பெருக வேண்டும் என்று விரும்புகின்றோம்.