LOADING

Type to search

மலேசிய அரசியல்

டான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் தமிழ்ப் பணி தொடர்கிறது 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டிக்கு ஆயத்தம்

Share

மலேசிய மடல்

கோலாலம்பூர், டிச.17:

மலேசியத் திருநாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழர்தம் பெருமைக்கு கட்டியம்கூறும் வண்ணம் அமையப் பெற்றுள்ள ஒரேக் கட்டடம் துன் சம்பந்தன் மாளிகை.

அந்த மாளிகையை கட்டியெழுப்பிய பெருமைக்குரிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் 29 ஆம் ஆண்டு(2021) இலக்கியப் போட்டியின் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.

ஒரு கூட்டுறவு அமைப்பான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், தன்னையும் நிலநிறுத்திக் கொண்டு இந்த மண்ணில் வாழ்கின்ற தமிழர்களின் தாய் மொழியாம் தமிழை வளர்க்கும் அரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தொடர்ந்து 29 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் போட்டியை தொய்வின்றி நடத்தி வருகின்றது.

தற்போதைய கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கத்தால் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் முகமாக வழக்கமாக விழா நடத்தி பரிசு அளிப்பதைத் தவிர்த்துவிட்டு, போட்டியில் வென்றவர்களுக்கான பரிசுத் தொகையை அஞ்சல்வழி அனுப்பி வைத்தது.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், 1992 ஆம் ஆண்டு முதல் இந்த இலக்கியப் போட்டியை நடத்திவரும் வேளையில், 2010-ஆம் ஆண்டில் இந்தக் கூட்டுறவு சங்கத்தால் தொடங்கப்பட்ட டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியம் இந்த இலக்கியப் போட்டியை நடத்தி வருகின்றது.

நாட்டில் புதிய எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் என்பதுடன் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியினை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தப்போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் 29-ஆவது ஆண்டாக(2021) நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் ஏராளமான படைப்பாளர்கள், நாட்டின் பல மாநிலங்களில் இருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த இலக்கியப் போட்டியில் வெற்றிபெறும் படைப்பாளர்களுக்காக வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் பரிசளிப்பு விழா நடைபெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக அறவாரியத்தின் செயலாளரும் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனருமான மதிப்புமிகு டத்தோ பா.சகாதேவன் தெரிவித்துக் கொண்டார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குரிய பரிசுத்தொகையும்(காசோலை) சான்றிதழும் அஞ்சல்வழி அனுப்பி வைக்கப்பட்டன.

29-ஆம் ஆண்டு இலக்கியப் போட்டியின் சிறுகதைப் பிரிவில் கெடா மாநிலம் பீடோங்கைச் சேர்ந்த அண்ணாமலை சவரிமுத்துவும் மரபுக் கவிதைப் பிரிவில் கோலாலம்பூரைச் சேர்ந்த மாரிமுத்து காசியும் கட்டுரைப் பிரிவில் கெடா மாநில லூனாஸைச் சேர்ந்த குமாரசாமி தண்ணீர்மலையும் மாணவர் சிறுகதைப் பிரிவில் மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி மித்ரா முருகையாவும் புதுக் கவிதைப் பிரிவில் ஜோகூர் மாநிலம் தங்காக்கைச் சேர்ந்த தமிழ்ச் செல்வி த/பெ நளதிருவனும் முதல் பரிசை வென்றனர்.

அத்துடன், உரிய நேரத்தில் வெற்றியாளர்களைத் தேர்வு செய்து ஒத்துழைப்பு நல்கிய நடுவர்களுக்கு அறவாரியத்தின் சார்பில் டத்தோ பா.சகாதேவன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதற்கிடையில், இந்த அறவாரியம், 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டிக்கான ஆயத்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி வரிசையில், 5-ஆவது போட்டியில், மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பன்னாட்டுப் பிரிவிலும் மலேசியாவின் மூத்த இலக்கியவாதியும் படைப்பாளருமான சை.பீர்முகம்மது உள்நாட்டுப் பிரிவிலும் வெற்றி பெற்றனர்.

மலேசியவாழ் தமிழர்களிடையே தமிழை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் முனைப்பும் அக்கறையும் காட்டிவரும் கூட்டுறவு சங்கம், அதற்கான தளமாக டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தை கடந்த 11 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது.

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்களிடையே தமிழ் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி வரும் இந்த அறவாரியம், தற்பொழுது 2022-ஆம் ஆண்டுக்குரிய 6-ஆவது உலகத் தமிழ்ப் புத்தகப் பரிசுப் போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க நாடு மலேசியா. தமிழகம், தமிழ் ஈழத்தை அடுத்து தமிழர்கள் அதிகமாக வாழும் நாடான மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சமூகம் பன்னாட்டு அளவில் தமிழ் எழுத்தாளர்களுக்காக இத்தகையப் போட்டியை நடத்துவது கண்டு, உலகத் தமிழர்கள் வியந்து நோக்குகின்றனர்.

இந்தப் போட்டியின்வழி இலக்கியப் படைப்பாளர்களுக்கு கிடைக்கும் பாராட்டும் பரிசும் அவர்களை இன்னும் எழுத ஊக்குவிக்கும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழினத்தின் பண்பாடு காக்கப்பட வேண்டுமென்றால், தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்களின் அடிப்படை வேர்களை நோக்கிய கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழர்கள் தமிழைப் படிப்பதில் நாட்டம் கொள்வதுடன், இலக்கியவாணர்கள் தமிழ் இலக்கியத்தைப் படைப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த அறவாரியத்தின் இலக்கு என்று அறவாரியத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியில் தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புகள் மலேசியாவிலும் உலக நாடுகளிலும் வெளிவர வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பன்னாட்டுப் பிரிவில் ஒரு வெற்றியாளரும் மலேசிய அளவில் ஒரு வெற்றியாளரும் ஒவ்வொரு போட்டியின்போதும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று இந்த அறவாரிய தலைமை இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் தெரிவித்தார்.

பொதுவாக மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை நாடுகளில் இருந்து நான்கு நடுவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒரு நடுவரும் என ஐந்து நடுவர்கள் இந்தப் போட்டிக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் போட்டியில் ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற படைப்பிற்காக ஈழ எழுத்தாளர் மு.பொன்னம்பலம் பத்தாயியிர டாலரையும் விடியல் என்ற நூலிற்காக மலேசியப் படைப்பாளி அ.ரெங்கசாமி பத்தாயிர வெள்ளியையும் பரிசாகப் பெற்றனர்.

அதைப்போல, 2014-ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவில் ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற நூலிற்காக தமிழகத்தின் கவிப்பேரரசு வைரமுத்துவும் மலேசியப் பிரிவில் ‘செலாஞ்சார் அம்பாட்’ என்னும் படைப்பிற்காக கோ.புண்ணியவானும் பரிசுகளை வென்றனர்.

2016-ஆம் ஆண்டு இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவு, உள்நாட்டுப் பிரிவு ஆகிய இரண்டிலுமே மலேசியர்கள் வென்றனர். அழகான மௌனம் என்னும் நூலிற்காக முனுசாமி கன்னியப்பன் பத்தாயிர டாலரும் காத்திருந்த விடியலுக்காக திருமதி விமலா ரெட்டி பத்தாயிர வெள்ளியும் பரிசாகப் பெற்றனர்.

2018 நவம்பர் 17-ஆம் நாள் கூட்டுறவு சங்க தோட்ட மாளிகையில் நடைபெற்ற நான்காவது போட்டி பரிசளிப்பு விழாவில் பன்னாட்டுப் பிரிவில் ‘1801’ என்ற நூலை இயற்றியதற்காக தமிழகத்தின் முனைவர் மு.இராஜேந்திரன்(ஐ.ஏ.எஸ்.) தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாயிர டாலர் பணப்பரிசு, கேடயம், பாராட்டுப் பத்திரத்துடன் சிறப்பு செய்யப்பட்ட வேளையில் மலேசியப் பிரிவில் ‘புதிய பதிவுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக கௌரி சர்வேசன் பத்தாயிர வெள்ளி வெகுமானத்துடன் சிறப்பு செய்யப்பட்டார்.

நக்கீரன் – Nakkeeran 013-244 36 24