தமிழ், சீனப் பள்ளிகள் அரசியல் சட்டப்பூர்வமானவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Share
-நக்கீரன்
கோலாலம்பூர், டிச30:
மலேசியாவில் இயங்குகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு அரசியல் சாசனப்படி முழு அங்கீகாரம் இருப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 29-ஆம் நாள் வரலாற்றுப்பூர்வ தீர்ப்பை அளித்துள்ளது.
மலேசியாவில் செயல்படுகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி மேற்கண்ட அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.
மலேசியாவில் தமிழ் மற்றும் சீன மொழிகளை பயிற்றுமொழியாகக் கொண்டு சுமார் 1,800 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய தாய்மொழிப் பள்ளிகளின்வழி ஏறக்குறைய 500,000 மாணவர்கள் தங்களின் கல்விப் பயணத்தை தாய்மொழிவழி தொடர்கின்றனர்.
நாட்டின் சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்திய சட்ட நடைமுறைகள், அரசியல் சாசன பிரகடனம் ஆகியவற்றை இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி நஸ்லான் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீபகற்ப மலாய் மாணவர் கூட்டமைப்பு(ஜிபிஎம்எஸ்), இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக் குழு(மாப்பிம்), மலேசிய எழுத்தாளர் சங்கக் கூட்டமைப்பு(கபீனா) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
1996 கல்விச் சட்டப் பிரிவுகள் 2, 17 மற்றும் 28-இன்படி, நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளின் செயல்பாடும் அவற்றில் மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகள் பயிற்று மொழிகளாக பயன்படுத்தப்படுவதும் அரசியல் சாசன விதி 152-இன் துணைவிதி (1)-க்கு முரணாக இருப்பதாக வாதிகள் தரப்பில் முன்வைக்கப்-பட்டது.
மேலும், மலேசியாவில் செயல்படுகின்ற தாய்மொழி பள்ளிகள், அரசியல் அமைப்புச் சட்ட விதிகள் 5, 8, 10, 11 மற்றும் 12-ஆம் பிரிவுகளை மீறுவதாத வாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்து அடிப்படை அற்றது என்று தன்னுடைய தீர்ப்பில் தெளிவாக வரையறுத்துள்ள நஸ்லான், தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இதே மொழிகள் பயிற்று மொழியாக இருப்பதை மலேசிய அரசியல் சாசன விதி 152 (1) தெளிவாக வரையறை செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்து தமிழ் மற்றும் சீன மொழி ஆதரவாளர்களும் அந்தந்த மொழிகளுக்கான பொது இயக்கங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர்.
ஆயினும், நீதிமன்ற வளாகத்தில் கடுமையான கட்டுப்பாடும் கொரோனா தொடர்பிலான எஸ்ஓபி(Standard Operating Procedure) கட்டுப்பாட்டு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டிருந்தன.
இந்த வரலாற்றுப்பூர்வ தீர்ப்பின் தொடர்பில் மலேசிய கல்வித் துறை முன்னாள் துணை அமைச்சரும் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ப.கமலநாதன் கருத்து தெரிவிக்கையில், “இந்தத் தீர்ப்பு உண்மையில் பெருமிதமும் தாய்மொழிக் கல்விக்கான பாதுக்காப்பையும் அளிக்கவல்லது” என்று தெரிவித்தார்.
இந்த நாட்டில் தாய்மொழிக் கல்வி குறித்து இனி எவரும் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்பு தீர்க்கமாக அமைந்துள்ளது என்று தெரிவித்த கமலநாதன், இனி இந்தியர்கள் குறிப்பாக தமிழ்ப் பெற்றோர்கள் அனைவருமம் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்து தமிழ்ப் பள்ளிகளின் இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்றும் கமலநாதன் இதன் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்தார்.
அதைப்போல, பேராக் மாநில வழக்கறிஞரும் தமிழ் ஆர்வலருமான மதியழகன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், “மலேசியத் திருநாட்டின் தாய்மொழிக் கல்வி குறித்து அரசியல் சாசனப்படி அளிக்கப்பட்டுள்ள உரிமையை இந்தத் தீர்ப்பு மறு உறுதி செய்துள்ளது என்றார். மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றாலும் தமிழ், சீன மொழிகளை பயிற்று மொழிகளாகக் கொண்ட தாய்மொழிப் பள்ளிகளுக்கு எந்தத் தடையும் வராது” என்று ஈப்போ ‘மதி பரம் & கோ’ வழக்கறிஞர் நிறுவன உரிமையாளருமான ச.மதியழகன் தெரிவித்தார்.
வாதிகளின் தரப்பில் நிதிமன்றத்தில் முன்னிலையான வழக்கறிஞர் முகமட் ஹனீஃப் கத்ரி அப்துல்லா, ‘மலேசியக் கூட்டரசு அரசியல் சாசன விதி 152-இன் துணை விதி(1), நாட்டின் தேசிய மொழி மலாய் மொழி என்பதை தெளிவாக வரையறை செய்துள்ளதால், தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அவற்றை தடைசெய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
தவிர, இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் நாள் நிறைவுக் கட்டத்தை எட்டியபோது, வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 29-ஆம் நாள் வழங்கப்படும் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்தும் தாய்மொழிப் பள்ளிகள் குறித்தும் தகவல்கள் ஊடகங்களில் அதிகமாக வரத்தொடங்கின. அதற்கேற்ப சமூக ஆர்வலர்களும் மொழிப் பற்றாளர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்தக் கட்டத்தில் வாதிகளின் தரப்பு வழக்கறிஞரான முகமட் ஹனீஃப், தீர்ப்பு வரும்வரை அனைவரும் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று முரட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டார்.
தாய்மொழிக் கல்வி என்பதும் தாய்மொழிப் பள்ளிகள் என்பதும் இனம், மொழி சார்ந்த உயிரணைய சிக்கலாகும்; உணர்ச்சிப்பூர்வமானதும் ஆகும். எனவே, இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கருத்து தெரிவிப்பது இயல்பானது.
ஆனால், டிசம்பர் முதல் நாள் இது குறித்து அறிக்கை வெளியிட்ட முகமட் ஹனீஃப் “அனைவரும் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும்” என்று சொன்னது ஜனநாயக விரோதமானது;
கட்டணம் பெற்றுக் கொண்டு ஒரு தரப்புக்காக வாதாடும் ஒருவர், பிரதிவாதிகள், பொதுமக்கள், தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் இவ்வாறு மிரட்டியதற்கு பதில்சொல்ல வேண்டிய நேரம் ஒரு நாளில் நேரும்.
முகமட் ஹனீஃப் தரப்பினர் முன்னெடுத்த வழக்கில் புத்ராஜெயா(மத்தியக் கூட்டரசு) மட்டும்தான் பிரதிவாதியாக தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டது.
பின்னர், மலேசிய இந்தியர் காங்கிரஸ்(மஇகா), மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மலேசிய சீனர் சங்கம்(மசீச), கெராக்கான், பூமிபுத்ரா கட்சிகள், சீனக் கல்வி கூட்டமைபான டொங் ஸோங், மலேசிய சீன கல்விக் குழு, மலேசியத் தமிழர் சங்கம், பேராக் தமிழர் திருநாள் இயக்கம், தமிழ்ப் பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர் நல சங்கம், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பு, ச்சோங் ஹ்வா இடைநிலைப்பள்ளி நிருவாகம் ஆகியத் தரப்பினர் தங்களையும் பிரதிவாதியாக இந்த வழக்கில் இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24