தனுஷ்கோடி அருகே இரண்டாம் மணல் திட்டில் கரை ஒதுங்கிய இலங்கை படகு
Share
(மன்னார் நிருபர்)
(02-2-2022)
மன்னார் வளைகுடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல் திட்டில் கரை ஒதுங்கிய இலங்கை மர்ம படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தனுஷ்கோடி அருகே இரண்டாம் மணல் திட்டில் இலங்கை கண்ணாடி இலைப் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற மெரைன் போலீசார், உளவுத்துறை மற்றும் சுங்கத் துறையினர் படகை மீட்டு இரவு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மீட்கப்பட்ட பைபர் படகு இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை மற்றும் சிவப்பு கலரில் இருந்துள்ளது.
படகில் யாரேனும் ஊடுருவினார்களா? அல்லது கடத்தலுக்கு பயன்படுத்த வந்ததா ? அல்லது காற்றின் சீற்றத்தில் கரை ஒதுங்கி யுள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகில் இன்ஜின் பொருத்தப்படும் இடம் சேதமடைந்தும், படகில் மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் இருந்ததாக தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்கப்பட்ட படகை சுங்க துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட படகு டிராக்டர் மூலம் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மர்ம படகு குறித்து இலங்கை பாதுகாப்பு படையினரிடம் விசாரிக்கும் போது படகின் பதிவு எண் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் ஆனால் படகு காணாமல் போனதாக மீன் துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு இது வரை எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் இலங்கை படகு கரை ஒதுங்கியது தனுஸ்கோடி பகுதி மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.