LOADING

Type to search

அரசியல்

‘மனைவியாக இருந்தாலும் கட்டாய பாலியல் உறவு வன்கொடுமை தான்’ என்கிறது கர்நாடக நீதிமன்றம்

Share

கணவனுக்கு எதிராக மனைவி தொடர்ந்த வழக்கில், ‘மனைவியாக இருந்தாலும் கட்டாய பாலியல் உறவு வன்கொடுமை தான்’  என்று கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மனைவியுடன் கணவன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்பாக கணவர் மீது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள சிறப்பு சலுகை மூலம் தண்டனைகள் எதுவும் கிடைப்பதில்லை.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375-ல் ஆண் தன்  மனைவியுடன் கட்டாய உடல் உறவில் ஈடுபட்டாலும் அந்த பெண்ணின் வயதைப்  பொறுத்து  அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவில் உள்ள சிறப்பு சலுகையால் மனைவியை கணவன் கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தாலும் இது குற்றமாக கருதப்படுவதில்லை.

இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யும்படியும் கீழமை கோர்டில் வழக்குத்தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அந்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு  ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி நாகபிரசன்னா, ஆண் ஆண் தான், சட்டம் சட்டம் தான், பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தான். கணவனாக ஆண் மனைவியான பெண் மீது பாலியல் வன்கொடுமை செய்தால் அது பாலியல் வன்கொடுமை தான். பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு என்றால்,  அந்த ஆண் கணவனாக இருந்தாலும் சரி’ என்றார்.

மேலும், பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட ஆண்களுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளோ, உரிமமோ திருமண அமைப்பு வழங்காது, வழங்கவில்லை, வழங்கவும் கூடாது’ என்றார், நீதிபதி.