LOADING

Type to search

கனடா சமூகம்

இலக்கிய கலை சமூக தள பொன்விழா நாயகர் லோகேந்திர லிங்கம் அவர்களின் ஊடக மகன் உதயன், பொன்விழா காணட்டும்!

Share

தமிழன்னையும் துணை நல்கட்டும்!!

-நக்கீரன்–கோலாலம்பூர், மே 23:

ஜூலை மாதத்திற்கும் தீவு நாடாம் இலங்கைக்கும் வரலாற்றில் குறிப்பிடத்-தக்க இடமுண்டு. குறிப்பாக, ஜூலை 21-ஆம் நாள் உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள். 1960-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உலகில் முதல் முறையாக, ஒரு பெண் ஒரு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். அந்தப் பெண் சிறிமாவோ பண்டார நாயகே; நாடு இலங்கை;

அதைப் போல இலங்கையின் பூர்வ குடிகளாம் ஈழத் தமிழ் மக்கள்மீது சிங்கள இனவெறி காடையர்கள் வகைதொகையின்றி வன்முறையை ஏவி, அரச பயங்கரவாதத்தின் துணை கொண்டு பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிரைக் குடித்த கறுப்பு வரலாறு இடம்பெற்றதும் இதே ஜூலையில்தான். ஆண்டு 1983; நாள் 23.

இந்த இரு சம்பவங்களும் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை கருப்பு அத்தியாயங்கள்.

அதேவேளை, மனிதன், முதன்முதலில் நிலவில் கால் பதித்த நல்ல வரலாற்றைக் கொண்டதும் இந்த ஜூலையில்தான்; நாள் 21, ஆண்டு 1969. அதைப்போல, என் வாழ்க்கையிலும் இதே ஜூலையில் ஒரு வெண் அத்தியாயம் உருவானது. நாள் ஜூலை 21; ஆண்டு 2007. இடம்பெற்ற இடம் மலேசியத் திருநாட்டின் முதல் உயர்க்கல்வி நிறுவனமான மலாயாப் பல்கலைக்கழகம்.

ஜூலை 20, 21, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 10-ஆவது மாநாடு நடைபெற்ற அந்த நேரத்தில், 21-ஆம் நாளில் அண்ணன் நாகமணி லோகேந்திர லிங்கம் பேசினார்.

அந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலையும் இழந்து விட்டேன்; அவர் என்னத் தலைப்பில் பேசினார் என்பதும் நினைவில் இல்லை. ஆனால், அவர் பேசிய போது வெளிப்படுத்திய செம்மாந்த கருத்து மட்டும் இன்றளவும் என் மனதில் சிம்மாசனமிட்டு கொளுவீற்றிருக்கிறது.

மாந்தனை செம்மைப்படுத்தி செழுமையான சிந்தனைக்கு உட்படுத்த அந்தந்த நிலத்தே உருவான பலவகையான சமய சிந்தனை, இன்று மதவெறிப் போக்காக உருமாறிவிட்டது. இன்றைய உலகில், மனிதர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான சிக்கல்களுக்கு அடிப்படை மதவாதம்தான்.

அதேவேளை, நன்னெறிப் பண்பையும் ஆன்ம நேயத்தையும் உள்ளடக்கிய சமய சான்றோர்களும் இதே சமுதாய வீதியில் உலா வருவதையும் காண முடிகிறது. அதில் ஒருவராகத்தான், அந்த நேரத்தில் இன்னார் என்று தெரியாத.. ., அறிமுகம் இல்லாத அண்ணன் நாகமணி லோகேந்திர லிங்கம் அவர்கள் அந்தப்போதில் என் மனதில் தோன்றினார்.

அவர் பேசியது இதுதான்:

மனிதர்களுக்கு சமய நெறி தேவைதான்; ஆனால், அது எப்போதும் எங்கேயும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதாக அமைதல் வேண்டும். பெரும்பான்மை-சிறுபான்மை என்பதெல்லாம் கூடாது. உதாரணத்திற்கு, 100 பேர் கூடியிருக்கின்ற ஓர் அவையில், 99 பேர் சைவர்களாக இருந்து ஒரேயோருவர் மட்டும் வேற்று சமயத்தினராக இருந்தால்க, அந்த இடத்தில்

“தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

என்று இறைவனை வாழ்த்தி வணங்குதற்குப் பதிலாக, எல்லார்க்கும் பொதுமறையான திருக்குறளின் ‘இறைமாட்சி அதிகாரத்தில் இருந்து இரண்டொரு குறட்பாக்களை ஓதலாம் என்றார்.

உலக அளவில், இன்றைய அவசியத் தேவையும் அவசரத் தேவையுமாக இருப்பது, சமய நல்லிணக்கம்தான். ஆயிரக் கணக்கான தமிழ் நெஞ்சத்தினர் குழுமியிருந்த அந்த அவையில் இவர் பேசிய அந்த மாந்தநேயக் கருத்து.. ., சமய நல்லிணக்கக் கருத்து என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அன்றைய காலக்கட்டத்தில் பணிபுரிந்த நாளேட்டிற்காக செய்தி சேகரிக்கச் சென்றதால், இந்தப் பொன்னான கருத்துடைய நன்மாந்தரை அறியவும் அவரை எந்நாளும் என் மனதில் இறுத்திக் கொள்ளவுமான நல்வாய்ப்பு அமைந்தது; அந்த நாள் ஜூலை 21, 2007.

அண்ணல் காந்தி பிறந்த அக்டோபர் 02-ஆம் நாளை உலக அகிம்சை நாளாகக் கொண்டாடும் முடிவை ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு முடிவெடுத்ததும், இதே 2007-ஆம் ஆண்டில்தான்.

இப்போது, அடுத்த 15 ஆண்டுகளில் அதேக் காந்தியை மதவாதத்தால் கொன்று தீர்த்தவரைக் கொண்டாடும் நிலை எழுந்ததற்கு மதவாதம்தான் பளிச்சென்ற காரணம். இத்தகைய மதவாதம், இந்த நாடு; அந்த நாடு என்றில்லை; எந்த நாட்டிலும் இத்தகைய மதவாதக் கொள்கையும் அதை உள்ளடக்கிய வலச்சாரி சிந்தனையும் பரவி-விரவி வருவதை, பொதுவாகக் காண முடிகிறது.

அண்மையில் பிரான்சு நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரோன் கூட, தட்டுத்தடுமாறித்தான் மதவாதத்தின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்து, அந்நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாகத் தேர்வானார்.

மலேசியாவிலும், மலாய் இனத்தவர் பெரும்பான்மையாக இருப்பதால், இந்த பெரும்பான்மை இன மக்களின் சமயமான இஸ்லாத்தின் அடிப்படையில், ‘மலாய் முஸ்லிம் அதிகாரம்’ என்னும் புதியவகை அரசியல் சித்தாந்தத்தை ஒருசில கட்சிகள் முன்னெடுக்கின்றன.

ஆனாலும், இந்த மண்ணுக்கே உரிய சமய நல்லிணக்கப் போக்கும் இன இணக்கமும் பல இன கலாச்சாரமும் அத்தகைய குறுகிய அரசியல் போக்கை வென்று வருகின்றன.

உலகில் இன்று நிலவும் மத சண்டித்தனத்தை 15 ஆண்டுகளுக்கு முன்னமே அவதானித்ததாலோ என்னவோ, சமய நல்லிணக்கக் கருத்தை, உலகளாவிய தமிழ்ப் பெருமக்கள் தம் பண்பாட்டு மேன்மையை மேலும் செம்மைப்படுத்த குழுமியிருந்த அந்த வேளையில் வெளிப்படுத்தினாரோ என்று எண்ணிப் பார்க்கிறேன்.

இப்படிப்பட்ட இந்த ஊடகத் திருமகனார்க்கு இன்று, மே 23, பிறந்த நாள்!

1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கனடாவிற்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்த திருவாளர் நாகமணி லோகேந்திரனார், பல்லாயிரக் கணக்கில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களுடன் இணைந்து, புதிய நிலத்திற்குரிய அரசியல்-பண்பாட்டு- பல இன கலாச்சாரக் கூறுகளை அவதானித்து, தன்னையும் தக அமைத்துக் கொண்டு வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

தமிழகத்தின் நியூஸ்7தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் திரு. நாகமணி லோகேந்திரம் அவர்கள், குறிப்பிட்டதைப் போல, பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழ் மக்கள் ஒருமித்து, ஒருங்கே சங்கமித்து வாழ முற்பட்ட வேளையில் ஓர் ஆபரண அகம், ஒரு துணிக் கடை, ஒரு புத்தகக் கடை, ஒரு மளிகைக் கடை போன்றவைக்கு எழுந்த தேவையைப் போல, தமிழர்களை ஒருங்கிணைக்கவும் தகவல் பரிமாற்றத்திற்கும் ஓர் ஊடகமும் அவசியம் என்பதை உணர்ந்த வேளையில் உதயமானதுதான் இந்த உதயன் என்று குறிப்பிட்டார்; இது முற்றிலும் உண்மைதான்.

கடந்த ஆண்டில் வெள்ளி விழாவைக் கொண்டாடிவிட்டு, அந்த உதயன் என்னும் பருவ-இணைய இதழை பொன் விழாவை நோக்கி நகர்த்தும் இந்தத் தருணத்தில் இவரின் எழுத்தாற்றலும் கவிதை வளமும் ஒருங்கிணைந்த இலக்கியப் படைப்பாற்றல், தமிழியப் பண்பாடுசார் கலை வளர்த்தல், ஊடகத்தை வழிநடத்துதல், பிறந்த மண்ணிலும் வாழும் நிலத்திலும் நலிந்தோரை நாடி நல்லாதரவு நல்குதல், இவை யாவற்றுக்கும் மேலாக உயிரணைய தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடாற்றுதல் என பன்முகப்பட்ட இவரின் சமுதாயப் பயணம் பொன் விழாவைத் தொட்டு நிற்கின்ற இந்த வேளையில், இவரின் பிறந்த நாளும் இன்று பாங்குற பொருந்தி நிற்கிறது..

இந்தவேளையில், வரும் வெள்ளிக்கிழமை 2022 மேத் திங்கள் 27-ஆம் நாளில் மலரவிருக்கின்ற உதயன் பருவ இதழ், இலங்கை-ஈழச் சிறப்பிதழாக மலர இருப்பதை அறிந்து உதயனின் உற்ற வாசகன் என்னும் முறையில் மிகவும் மகிழ்கின்றேன்.

இவர் வாரப் பத்திரிகையை நடத்திக் கொண்டு, கூடவே இணைய இதழையும் இமைப்பொழுதுதோறும் புதுப்பித்துக் கொண்டு, சமூக வெளியிலும் அரசியல்-சமூக-கலை-கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறதென்றால், இவரின் அயராத உழைப்பும் தேனீயைப் போன்ற பரபரப்பும் காரணம் என்பதில் ஐயமில்லை.

உதயனின் ஊடகப் பயணத்தில் தந்தையுடன் இணைந்து சளைக்காமல் பாடாற்றும் இவரின் அன்பு மகள் திருமதி ஜனனிகூட, “கடின உழைப்பு.., கடின உழைப்பு என எந்த நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் அப்பா, ஓயாத செயல்பாட்டுக்குச் சொந்தக்காரர் என்றார்.

அதைவிட, இன உணர்வும் மொழிப்பற்றும் மிகுந்திட்ட அப்பா, உதவி என்று நாடிவரும் எவரையும், வேறு இடத்தைத் தேடச்சொல்லி கைவிட்டுவிட மாட்டார். தம் இனம்; தம் மக்கள் என தமிழ் மக்களின்பால் தளராத பற்றுகொண்டு, ஆலய வளர்ச்சி, பாட சாலை மேம்பாடு, பொது மண்டப உருவாக்கம், கலை-இசை நிகழ்ச்சி ஆதரவு என எந்த நேரமும் ஏதாவது களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார் என்று, தன் தந்தையாரைப் பற்றி ஜனனி நினைவுகூர்ந்தார்.

நினைவில் வாழும் கலைஞர் மு.கருணாநிதி ஒருமுறை, “உழைப்பு.. உழைப்பு.. . உழைப்பு; அதன் மறுபெயர்தான் ஸ்டாலின்” என்றார். இது, ஒரு தந்தை தன் மகனைப் பற்றி சொன்னது; இங்கு, ஒரு மகள், தன் தந்தையைப் பற்றி அதேவிதத்தில் சொன்னதைப் போல நான் உணர்கிறேன்.

அதேவேளை, குறித்த நேரத்தில் குறிப்பிட்ட பணியை முடிக்கவில்லை யெனில் எவராக இருந்தாலும் அப்பாவிற்கு வரும் கோபம் அலாதியானது; இருந்தபோதும், இது நல்ல அம்சமா அல்லது கெட்ட பண்பா என்று என்னால் அவதானிக்க முடியவில்லை என்றும் சொன்னார் ஜனனி.

என்னதான், சுறுசுறுப்பிற்கும் ஓயாத உழைப்புக்கும் வருமுன் அவதானிக்கும் பண்புநலனுக்கும் சொந்தக்காரராக இருந்தாலும், இல்லத்தில் இவரின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படும் அன்புத் துணைவியாரின் ஒத்துழைப்பும் அணுசரணையும் ஈடுபாடும் இல்லாவிடில், இந்த அளவிற்கு இவரால் அகலக் கால் வைத்து செயல்பட முடியாது.

இவருக்கு கிட்டும் பெருமையிலும் புகழிலும் பாதி அந்த அன்பு அண்ணியாருக்கு சொந்தம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

வாழ்க உதயன்!

வளர்க உதயன் குடும்பம்!!

உதயனுக்கும் உதயன் குடும்பத்திற்கும் வேராகவும் விழுதாகவும் விளங்கும் திருவாளர் நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்கள் வாழ்க.. வாழ்க; நீடு வாழ்க!

இவர் பிறந்த இன்றைய மே 23, தமிழ் ஈழ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாளும் ஆகும். மட்டக்களப்பு நகரை, போர்த்துகீசியரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றியதும் இதே நாளில்தான்; ஆண்டுதான் 1633.