LOADING

Type to search

மலேசிய அரசியல்

வள்ளல் ரெனா’வின் குலவிளக்கு தாமரைக்கு மணவிழா ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், ஜூன் 20:

பிரிட்டிஷ் காலத்து மலாயா முதல் தற்போதைய சுதந்திர மலேசியாவரை மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் வள்ளல் என்ற அடைமொழிக்கு உரியவரான ‘ரெனா’ என்னும் ரெங்கசாமி பிள்ளையின் மகன்வழி பெயர்த்தி தாமரைக்கு கோலாலம்பூரில் கோலாகல மணவிழா நேற்று நடைபெற்றது.

மலேசியத் சமுதாயத்தில் வள்ளல் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படும் ஒரே மனிதர் ‘நினைவில் வாழும்’ நா. ரெங்கசாமி பிள்ளை.

நாடு விடுதலை அடைந்த காலக் கட்டத்தில், வடபுலத்தே வாழ்ந்துவந்த இவர், புக்கிட் மெர்தாஜம் என்னும் தோட்டத்தில் வாழ்ந்த முப்பது தமிழ்-மலாய்க் குடும்பங்களுக்கு தேச விடுதலைப் பரிசாக குடும்பத்திற்கு ஓர் ஏக்கர் நிலம் என அன்பளிப்பு செய்தவர்.

தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள், பொது மண்டபங்கள், தோட்டப் பாட்டாளிகளுக்கு வீட்டு மனை என்றெல்லாம் வாரிவாரி வழங்கி வள்ளல் எனப் பெயரெடுத்த ரெங்கசாமி, கவிஞர் கண்ணதாசனுக்கு குடும்ப நண்பரைப் போல விளங்கினார்.

வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்த வள்ளல் ரெனா, அரசியலிலும் அகலக் கால்வைத்து செயல்பட்டார். குறிப்பாக, மலாய் அரசியல் கட்சியான அம்னோவில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த அவர், மலேசியாவின் பிரதமர்களான துங்கு அப்துல் ரகுமான், துன் அப்துல் ரசாக், துன் உசேன் ஓன் என முதல் மூன்று பிரதமர்களுடன் நெருக்கமாக இருந்தார்.

அவரைப் போலவே, அவரின் அடியொற்றி வாழும் அவரின் புதல்வர்களான துரைசிங்கம், இராமலிங்கம், நாகலிங்கம் உள்ளிட்ட மக்கள் தாமரைக் குழுமம் என்ற பெயரில் மலேசியாவில் வர்த்தகக் குழுமத்தை உருவாக்கி, தரமான தங்குமிட வசதியுடன் கடற்கரைப் பட்டணங்களில் ஹோட்டல் தொழில், நாட்டின் மையப் பகுதியான கிள்ளான் பள்ளத்தாக்கில் உணவகத் தொழில், தேசிய அளவில் திரையரங்கத் தொழில் என்றெல்லாம் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தில் செம்மாந்த தொழில் குழுமப் புலிகளாக வலம்வருகின்றனர்.

தலைநகரில் பாரம்பரியச் சிறப்புக்குரிய கொலிசியம் திரையரங்கம் விற்பனைக்கு வந்தபோது, அதைக் கொள்முதல் செய்து அதேப் பெயரில் நடத்தி வருகின்றனர். மலேசியத் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ‘LFS’ என்னும் சுருக்கெழுத்து மிகவும் பிரபலம்; Lotus Five Star என்னும் பெயரில் நாடு முழுவதும் ஏராளமான திரையரங்குகளை நடத்தி வருகின்றனர் இந்தத் தாமரை வர்த்தகக் குழுமத்தினர்.

இத்தகைய தாமரைக் குழுமத்தின் பெருந்தூண்களில் ஒன்றான டத்தோ ரெனா.இராமலிங்கம் என்னும் நல்லாரின் அரும்புதல்வி தாமரைக்கும் அர்விந்த்-ற்கும் கோலாலம்பூர், டூத்தா மாஸ் சாலை-2இல் அமைந்துள்ள மலேசிய பன்னாட்டு வர்த்தக-கண்காட்சி மையத்தில் நேற்று ஜூன் 19, ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் நடைபெற்றது.

டத்தோ இராமலிங்கம் குடும்பத்திற்கும் பத்திரிகைத் துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் மலர் நாளிதழ் இவர்களின் குடும்பத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

அந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஒரு நாளிதழை நடத்த டத்தோ இராமலிங்கம் மேற்கொண்ட முயற்சி, சில அரசியல் தலைவர்களின் தலையீட்டினால் தடைபட்டது.

இதனால், தாமரை வர்த்தகக் குழும வளர்ச்சியில் முழு ஈடுபாடு காட்டியதுடன், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தை உருவாக்கி, அதை நீண்டகாலமாக வழிநடத்தியதுடன் அந்தச் சங்கத்திற்கு சொந்தமாக ஒரு கட்டடமும் இவரின் தலைமையில் கொள்முதல் செய்யப்பட்டது.

மலேசியாவின் 5-ஆவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த டத்தோ ரெனா. இராமலிங்கம், தற்பொழுது மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் நிரந்தர சிறப்புத் தலைவராக செயல்படுகிறார். இவரின் மகளான தாமரையின் மணவிழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்திய சமுதாயத் தலைவர்கள், மலாய்த் தலைவர்கள், வர்த்தகப் பெருமக்கள், பத்திரிகை வட்டத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள், தமிழ் நாட்டில் பூர்வீக ஊரான சிவ கங்கைச் சீமையைச் சேர்ந்த திருப்புத்தூரில் இருந்த ஒரு வாரத்திற்கு முன்பே வருகைதந்திருந்த உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியாகவும் கொரோனா பருவத்திற்குப் பின் தலைநகரில் அதிகமானோர் பங்குபெற்ற ஒன்றுகூடலாகவும் தாமரை-அர்விந்த் மணவிழா அமைந்தது.