LOADING

Type to search

அரசியல்

இலங்கையின் வட மாகாணத்தில் போதைப் பொருட்கள் பாவனை குறித்து `பெருங்கவலை`

Share

எமது யாழ் செய்தியாளர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கடந்த 3 மாதங்களில் யாழில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன விடுதலை வேண்டிப் போராடிய இனம் இன்று போதையில் இருந்து மீளப் போராடும் அவலத்திற்கு இன்று தள்ளப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்புகளுக்கு அப்பாற்பட்டு 141 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதன் தென் பகுதி கடற்பகுதி ஊடாகவே பெரும்பாலும் போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாகக் கேரள மாநிலத்திலிருந்தே இவை பெருபாலும் இலங்கைக்குள் நுழைகின்றன.

அவ்வகையில் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 ஆயிரம் கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் பிடிபடாமல் கொண்டு செல்லப்பட்டது எவ்வளவு என்ற கவலைக்குரிய கேள்வி மக்களால் எழுப்பப்படுகின்றது.
”இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் பின்பு விடுதலை சிந்தனையே ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த போதைப் பொருட்கள் நாட்டிற்குள் உலாவ விடப்பட்டதாகவும் இதற்கு எடுத்துக் காட்டாகப் போர் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் பாவனை என்ற விடயமே அறியப்படாத ஒன்று” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டுகிறார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் அளவே கணிசமாக இருக்கும் போது, பிடிபடாமல் இதர வழிகளில் நாட்டிற்குள் பல மடங்கு வந்திருக்கலாம் என்கிற கவலைகளைப் புறந்தள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறுகிறார்.

ஏனெனில் கடந்த 12 ஆண்டுகளில் கேரள கஞ்சா மட்டும் 27,357 கிலோ அரச படைகளிடம் அகப்பட்டுள்ள அதே நேரம் 4,152 கிலோ ஹெராயினும், 1081 கிலோ ஐஸ் போதைப் பொருளும் கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு அகப்பட்டுள்ளன என கடற்படையினர் உறுதி செய்கின்றனர்.
ஆனால், கடத்தப்படும் போதைப் பொருட்கள் பிடிபடும் போது, சரியாக எவ்வளவு பிடிபட்டன என்பதற்கு அப்பாற்பட்டு, அதில் ஒரு தொகுதி கணக்கில் காட்டப்படாமல் கள்ளமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டு உள்நாட்டு/வெளிநாட்டுச் சந்தையில் விற்பனைக்குச் சென்றதா என்பது பற்றிய சந்தேகங்கள் இன்றளவும் மக்களால் எழுப்பப்படுகின்றன.

இவற்றிற்கு மேலதிகமாக தற்போது இலங்கையிலும் பயிரிடப்பட்ட11,026 கிலோ கஞ்சாவும் அகப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறானால் போரின் பின்பு 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 43,616 கிலோ போதைப் பொருள் இலங்கையில் பிடிபட்டுள்ளமை மக்களிடையே அதிலும் குறிப்பாக தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தளவிற்கு தொடர்ச்சியாக பெருமளவிலான போதைப் பொருட்கள் எப்படி இந்தியக் காவல்துறை, கடலோர பாதுகாப்புப் படையினர், சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரையும் மீறி இலங்கைக்கு கடத்தப்படுகிறது என்பதும், தமது கடற்பிராந்தியத்தை பாதுகாக்க மிகவும் விழிப்பாக இருக்கிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் இலங்கைக் கடற்படையினரை ஆகியோரையும் மீறி எப்படி இவை இலங்கைக்குள் நுழைகின்றன என்று கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இலங்கை கடற்படையால் கைப்பற்ற அளவைவிட நாட்டிற்குள் கூடுதலாக போதைப் பொருட்கள் ஊடுருவியிருக்கலாம் என்கிற ஊகங்கள் வலுவாக உள்ளன என்பது பொதுவான புரிதலாகவுள்ளது.

கேரளா கஞ்சா தற்போது இந்தியாவில் கிலோ ஒன்று 20 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை மட்டுமே விலையாகுவதாக தெரிவிக்கப்படுவதனால் இது இலங்கை நாணயத்தில் ஒரு லட்சம் ரூபா முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாவினை எட்டுகின்ற போதும் இலங்கையிலே ஒரு கிலோ கஞ்சாவானது தற்போது 3 லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்ற சூழலில் எஞ்சிய பணம் கடத்தல்காரரின் வருமானம் என்கின்றனர். அதில் மேலிருந்து கீழ் வரை பங்கு செல்கிறது என்பதையும் மறுக்க இயலாது என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இலங்கைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்கள் முழுமையாக இலங்கையரின் பாவனைக்கு அன்றி அவை ஒன்று சேர்க்கப்பட்டு பல வழிகளில் வேறு நாடுகளிற்கும் கடத்தப்படுவதாக தற்போது கண்டறியப்படுவதனால் இவை சர்வதேச கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.

இன்று யாழ் குடாநாட்டின் பெரியவர்கள் மட்டுமின்றி இளையோரிடமும் பரந்துபட்டளவில் போதைப் பழக்கம் உள்ளன, அது உடல் மற்றும் மனதை மிகவும் பாதிக்கும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடுத்தகட்டமாகச் சிறார்களும் இந்த மாயவலையில் சிக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் இப்போது பெற்றோரிடம் ஏற்பட்டுள்ளது என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

போதைப் பொருட்கள் பாவனையை தடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய திணைக்களங்கள் இன்னமும் அசமந்தமாகவே இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கடந்த வாரம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தமை சிந்திக்கப்பட வேண்டியதாகவே உள்ளது.

இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுற்றி 273 கடல் மைல் தூரம் உள்ளது. அதேநேரம் இந்த 273 கடல் மைல் தூரத்தினைப் பாதுகாக்க அல்லது கண்காணிக்க என்னும் பெயரில் 93 முகாம்கள் அல்லது நிலையங்களில் கடற்படையினர் உள்ளனர் அதாவது 3 கடல்மைல் தூரத்திற்கு ஒரு இடம் உள்ளது. அதனையும் தாண்டி எவ்வாறு இந்த போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக எடுத்து வரப்படுகின்றது என்பதற்கும் இன்றுவரை விடைகாண முடியவில்லை.