LOADING

Type to search

கனடா அரசியல்

ஸ்காபரோவில் பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழா

Share

குரு அரவிந்தன்

சென்ற வெள்ளிக்கிழமை 21-10-2022 ஸ்காபரோவில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சேலம் முனைவர் வே. சங்கரநாராயணன் எழுதிய பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு உதயன் விழாவிற்குப் பிரதம விருந்தினராகத் தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்த முனைவர் வேலாயுதம் சங்கரநாராயணன் அவர்கள் கனடாவில் தான் பார்த்த, சந்தித்த, கேள்விப்பட்ட சில விடயங்களைக் கட்டுரையாக உதயன் பத்திரிகையில் தொடராக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து கனடா உதயன் வாரஇதழின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் நூலாக வெளியிட்டிருந்தார். திருச்சியில் இயங்கும் இனிய நந்தவனம் பதிப்பகத்தினர் இந்த நூலை அழகாகப் பதிப்பித்திருந்தனர். மதுரை ஆ.சு. கண்ணன் இதற்கான அட்டைப்படத்தைத் தயாரித்திருந்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவை கனடா தமிழ் எழுத்தாளர் இணையமும், கனடா தமிழ் கவிஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம் ஆகியவற்றுடன் மாலை ஏழு மணியளவில் விழா ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. வரவேற்புரையை ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் தலைவர் உரையை கனடா எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸ் அவர்களும் நிகழ்த்தினார்கள். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அறிமுக உரை, வெளியீட்டுரையைத் தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் அறிஞர்கள் பலரின் உரைகள் இந்த வெளியீட்டு விழாவில் இடம் பெற்றன. மனதுக்கு இதமான இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரை இடம் பெற்றது. இறுதியாக பாஸ்டர் ஜெயானந்தசோதி அவர்களின் நன்றியுரையுடன் நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக முடிவுற்றது.

எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையின் தொடக்கத்தில் சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த எழுத்தாளர்களான கே. எஸ். சிவகுமாரன் மற்றும் தெளியவத்தை யோசெப் ஆகியோருக்குக் கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அகவணக்கம் செலுத்தினார். மேலும் கடந்த 30 வருடங்களில் கனடா தமிழர்களின் எழுச்சியை எடுத்துச் சொல்லும் இந்த நூலின் தொடராகப் பாகம் இரண்டும் வெளிவர வேண்டும் என ஆசிரியரிடம் வேண்டுகோள் வைத்தார்.

இந்த நூலை வெளியிட்ட உதயன் பிரதம ஆசிரியர் ஆர்.என், லோகேந்திரலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தியும், நூலைப் பதிப்பித்த இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் சந்திரசேகரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருக்கின்றன. 144 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் கனடாவைப் பற்றி 32 அத்தியாயங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதைவிட கட்டுரைக்கு ஏற்ற வகையில் புகைப்படங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. கனடியத் தமிழர்களின் வாழ்கை வரலாற்றில் சில பகுதிகளை இந்த நூல் எடுத்துச் சொல்வதால் ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இது அமைந்திருக்கிறது. பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு சிற்றுண்டியும், இரவு உணவும் வழங்கப்பட்டன.