LOADING

Type to search

கதிரோட்டடம்

அன்றைய அங்கீகரிக்கப்பெற்ற புலம் பெயர்வும் இன்றைய ஆபத்துக்கள் நிறைந்த புலம்பெயர்வும்

Share

கதிரோட்டம் 11-11-2022

இலங்கையிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்து மேற்குலக நாடுகளுக்கு செல்வது கடந்த அரை நூற்றாண்டாக இடம்பெற்றுவரும் பயணங்களில் ஒன்றாகும். அன்றைய நாட்களில் அங்கீகரிக்கப்பெற்ற புலம் பெயர்வாகவும் இன்றைய நாட்களில் இவ்வாறான பயணங்கள் ஆபத்துக்கள் நிறைந்த புலம்பெயர்வாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் முன்னரைவிட பொருளாதாரப் பிரச்சனைகளும் இனவாதப் பிரச்சனைகளும் அதிகரித்துக் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் நாட்டை விட்டு மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கான ஆர்வத்துடனேயே உள்ளார்கள் என்பது நிதர்சனமாகும்.

தற்காலத்தில் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக படகுகளிலும் கப்பல்களிலும் மேற்குலக நாடுகளுக்கு பயணிப்பவர்களை எச்சரிக்கும் வகையில் சில நாடுகளின் அரசாங்கங்கள் இலங்கையிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகைகளிலும் விளம்பரங்களை பிரசுரிக்கின்றன.

தங்கள் நாட்டு அரசாங்கங்கள் இவ்வாறு சட்டவிரோதமாக ஆபத்துக்கள் நிறைந்த பயணங்களை மேற்கொண்டு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் நிச்சயமாக நாடு கடத்தப்படுவார்கள் என்ற கடுமையான முடிவுகளைக் கூட அந்த விளம்பரங்களில் குறிப்பிடத் தவறுவதில்லை.

இவ்வாறான கடும்போக்கான நிலைப்பாடுகள் உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் போது அபிவிருத்தி அடைந்துள்ள மேற்குலக நாடுகளுக்கு கடல்மார்க்கமான சட்டவிரோதப் புலம்பெயர்வு முயற்சிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இவ்வாறான முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும், மீன்பிடிப் படகுகளில் கடல்மார்க்கமாக மேற்கொள்ளும் முயற்சிகள் பாதுகாப்பற்றவையும் உயிராபத்து மிக்கதுமாகும் என்றும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றது.

அப்படியிருந்தும் சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பற்ற மீன்பிடிப்படகுகளில் கடல்மார்க்கமாகப் புலம்பெயர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தறை போன்ற பல பிரதேசங்களில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணிக்க ஏற்பாடு செய்ய செய்யப்பட்டிருந்த படகுகளும் கைப்பற்றுள்ளன. அதேநேரம் ஒருசிலர் இந்நாட்டின் கடற்பரப்புக்குள் வைத்தும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோத புலம்பெயர்வு நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முயற்சிகளும் அடிக்கடி இடம்பெறவே செய்கின்றன. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் ஏமாற்று வார்த்தைகளை நம்பியே இவ்வாறான முயற்சிகளில் பலர் ஈடுபடுகின்றனர். ஆனால் கடல்மார்க்கமான சட்டவிரோதப் புலம்பெயர்வு மிகவும் ஆபத்தானதும் பயங்கரமானதுமாகும். ஆழ்கடலில் இடம்பெறும் அனர்த்தங்களும் அதன் விளைவான மரணங்களும் இதற்கு நல்ல சான்றுகளாகும்.

இவ்வாறான ஆட்கடத்தல் வியாபாரம் உலகின் எல்லா எல்லாப் பிராந்தியங்களிலும் இடம்பெறவே செய்கின்றது. இன்றைய காலகட்டத்தில் அதிக இலாபம் ஈட்டக் கூடிய ஒரு செயற்பாடாகவே இவ்வியாபாரம் விளங்குகிறது. எனவேதான் மக்களின் விருப்பம் கருதி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான தொகையை வசூலித்த பின்னரும் அப்பாவி மக்களை ஏமாற்றும் கடத்தல்காரர்கள் தான் உசாராக செயற்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது

சட்டவிரோத புலம்பெயர்வுக்கு எதிரான கடும் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலிலும் கூட 300 க்கும் மேற்பட்ட இலங்கையர் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடிக் கப்பலொன்று வியட்நாம் நாட்டின் தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ள வொங்க் தௌ துறைமுகத்தில் இருந்து 258 கடல்மைல் தொலைவில் பிலிப்பைன்ஸுக்கும் வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் இரண்டொரு தினங்களுக்கு முன் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அச்சமயம் கடற்பரப்பு கொந்தளிப்பாகக் காணப்பட்டுள்ளதோடு, குறித்த கப்பல் கடுங்காற்றில் சிக்குண்டதால் கப்பலின் என்ஜின் பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்திருக்கின்றது.

இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட இலங்கை கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியைக் கோரியது. அக்கோரிக்கைக்கு சிங்கப்பூர் உடனடியாக பதிலளித்தது.

வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினர் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள கப்பலுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் முயற்சியை மேற்கொண்டதோடு, இக்கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள கடற்பிராந்தியத்தில் அவ்வேளையில் காணப்பட்ட கப்பல்களுக்கு அவசர உதவிக்கான சமிக்ஞையையும் விடுத்தனர்.

அந்த சமிக்ஞையின் அடிப்படையில் அச்சமயம் ஜப்பானிய கொடியுடன் அப்பிராந்தியத்தில் காணப்பட்ட ஹீலியோஸ் லீடர் என்ற கப்பல் விரைந்து செயற்பட்டதோடு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்த 264 ஆண்களையும் 19 பெண்களையும் 20 குழந்தைகளையும் நேற்றுமுன்தினம் பாதுகாப்பாக மீட்டு, வியட்நாம் வொங் தௌ துறைமுகத்திற்கு அழைத்து சென்றது. உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு அவர்கள் தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்திற்கு உள்ளான லேடி 3 என்ற இக்கப்பல், 300 க்கும் மேற்பட்ட இலங்கையருடன் தாய்லாந்தில் இருந்து மியன்மார் நாட்டு கொடியுடன் கனடா நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஆனால் கடல்மார்க்கமான சட்டவிரோத புலம்பெயர்வு மிகப் பயங்கரமானதும் ஆபத்துக்கள் நிறைந்ததும் ஆகும் என்பதற்கு இந்த சம்பவமும் நல்ல எடுத்துக்காட்டாகும்.

ஆகவே கடல்மார்க்கமான சட்டவிரோத புலம்பெயர்வை எந்த நாட்டை நோக்கிச் சென்றாலும், அவை நிச்சயமற்றவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறித்த ஆட்கடத்தல்காரர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறுவதையும் உயிராபத்து மிக்க அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதையும் தவிர்த்துக் கொள்வதோடு வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இவ்வாறான செயல்களுக்குள் தங்கள் உறவினர்களையோ அன்றி நண்பர்களையோ தள்ளிவிடுவதும் தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும்.