LOADING

Type to search

மலேசிய அரசியல்

வலதுசாரி திசையில் மலேசிய அரசியல்: நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்காது

Share

அன்வாரின் பிரதமர் கனவு நனவாகுமா?

-நக்கீரன்

கோலாலம்பூர், நவ.20:

அமெரிக்கா உட்பட உலகெங்கும் பரவி வருகின்ற இன-மத அடிப்படை-யிலான வலச்சாரி அரசியல் மலேசியாவையும் ஆக்கிரமித்துள்ளதற்கு போதுமான சான்று, நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் கண்டுள்ள தொங்கு நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி பெற்றுள்ள மிருக பலம்.

மதவாதம் இனவாதம் இரண்டையும் இரு கண்ணென கொண்டிருக்கும் பாஸ் கட்சிதான் நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தேற்தல் நடந்த 220 தொகுதிகளுக்கான முடிவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்சி மட்டும் 49 இடங்களைக் கைப்பற்றி, அடுத்த ஆட்சியை அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த இக்கட்சி, இப்பொழுது நெருக்கமாக மும்மடங்கு இடங்களை வென்றுள்ளது. 18 வயதை எட்டிய இளம் வாக்காளர்களில் பெரும்பாலும் பாஸ் கட்சி-பெர்சத்து-கெராக்கான் கூட்டணியை ஆதரிப்பதாகத் தெரிகிறது.

தொடக்கக் கல்வியை சமயப் பள்ளியில் பெற்ற மாணவர்களில் பெரும்பான்மையினர், இன-சமய அடிப்படையிலான ‘மலாய்-முஸ்லிம் அதிகாரக் கொள்கையை முன்னெடுத்துள்ள பாஸ்-பெர்சத்து கட்சிகளை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதற்கான சாத்தியம் தெரிகிறது.

கடந்த தேர்தலின்போது உருவான நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு கொல்லைப்புற ஆட்சியின் முதல் அங்கத்தை வழிநடத்திய டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் இப்பொழுது பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அவாங் அடிக்கு இணையாக இனவாத அரசியலை முன்னெடுக்கிறார். இவர்கள் இணைந்த தேசியக் கூட்டணியின் இலட்சியமே, ‘மலாய்-முஸ்லிம் அதிகாரக் கட்டமைப்பு’தான்.

இந்தக் கூட்டணிக்குத்தான் 15-வது பொதுத் தேர்தல் மூலம், இவர்களே எதிர்பாராத வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். இந்தக் கூட்டணி, பெர்லிஸ் மாநிலத்திலும் பேராக் மாநிலத்திலும் தேசிய முன்னணியை பந்தாடி களத்தில் இருந்தே தூக்கி அடித்துள்ளது.

திரங்கானு, கிளந்தான், கெடாவைத் தொடர்ந்து, இப்பொழுது பெர்லிஸ் மாநிலமும் பாஸ் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. பேராக் மாநில சட்டமன்றத்தின் 56 தொகுதிகளுக்கான முடிவு வெளியாகும் நிலையில், அந்த மாநிலத்திலும் பாஸ் கட்சி மேலாண்மை செய்வதற்கான சூழல் தென்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் 3 மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ள நிலையில் பகாங் மாநிலத்தை மட்டும் தேசிய முன்னணி தக்கவைக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணித் தலைவரும் 30 வருடங்களாக பிரதமராகக் காத்திருப்பவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை பலம் இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, தேசியக் கூட்டணி ஆகிய 3 அணிகளில் எந்த அணிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தெளிவான அதிகாரத்தை மக்கள் அளிக்காமல், தொங்கு நாடாளுமன்றத்தை உருவாக்கி விட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்த அரசியல் நிலையற்றத் தன்மையைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அன்வார் விரைந்து செயல்பட்டு பாஸ்-பெர்சத்து கட்சிகளை முந்திக்கொண்டு போர்னியோ மண்டல மாநிலங்களான சபா-சரவாக் மாநிலங்களின் கட்சிகளை இணைத்துக் கொண்டு உடனே புத்தாட்சி அமைக்க ஆவண செய்ய வேண்டும்.

தேசிய முன்னணியைப் பொருத்தவரை ஒரேயொரு தமிழர் டத்தோஸ்ரீ மு.சரவணன் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார் எனத் தெரிகிறது; அதேவேளை, நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அதிகமான தமிழர்கள், இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

புதிதாக தேர்வாகியுள்ள 15-ஆவது நாடாளுமன்றத்திற்கு இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்கூட தேர்ந்தெடுக்கப்படாதது வருத்தத்திற்கு உரியது. கோல லங்காட் தொகுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த மோகனா வெற்றி பெறாத நிலையில், நம்பிக்கைக் கூட்டணியின் கோ.மணிவண்ணனும் தேர்வாகாதது வருத்தம்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தேர்தலில் ஒரேயொரு ஆறுதலான அம்சம், அணிதாவும் தவளைக் கூட்டத்தை உருவாக்கி வழிநடத்திய தலைமைத் தவளைகளின் பின்னங்கால்கள் அடியோடு நறுக்கப்பட்டதுதான்.

வக்கரிக்கும் சேவலைப் போல ஓயாமல் இரைச்சல் எழுப்பிவந்த பெஜுவாங் கட்சியும் வாரிசான் கட்சியும் விரட்டியடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, துன் மகாதீரின் வைப்புத் தொகையை லங்காவி வாக்காளர்கள் தட்டிப் பறித்ததை நினைக்க நினைக்க ஆனந்தமாக இருக்கிறது.

இனியாவது அவர் அமைதிகாத்து, வாயாடித்தன அரசியலைத் தவிர்த்தால் நல்லது. வாக்களித்த மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து தானும் அணிதாவி, இன்னும் 10 பேரையும் அணிதாவ வைத்து நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கெடுத்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, கோம்பாக் தொகுதியில் மண்டியிட்டதும் அவரின் வழியில் அக்கிரம அரசியல் புரிந்த ஸுரைடா கமாருடின் அம்பாங் தொகுதியில் வைப்புத் தொகையைப் பரிகொடுத்ததும் இனிப்பான செய்தி! டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாராவிற்கும் இத்தகைய தண்டனை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் சிகாமாட் தொகுதியில் இருந்து தொடைநடுங்கி பின்வாங்கிவிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணியைப் பொறுத்தவரை இப்பொழுதும் ஒன்றும் கைமீறிப் போகவில்லை. அவர்கள், தீபகற்ப மலேசியாவில் 86 முதல் 94 இடங்களை இலக்கு வைத்தனர். ஆனால், 82 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதை ஆதாரமாகக் கொண்டு விரைந்து காரியமாற்றினால், அன்வார் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மதவாதம் பேசும் பாஸ் கட்சியின் முனைப்பை அவரால் முறியடிக்க முடியும். இத்தகைய முனைப்பு, பேராக், பகாங் மாநில ஆட்சிகளையும் நிறுவ துணைபுரியும்.

நவம்பர் 20-ஆம் நாள் முடிவு தெரியவரும்; நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்று!