LOADING

Type to search

மலேசிய அரசியல்

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க மணிவிழா

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், டிச.05:

பினாங்கு மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், உருப்பெற்று, திருப்பெற்று அது மேற்கொண்ட நெடிய இலக்கியப் பயணத்தில் 62ஆம் ஆண்டை எட்டியிருக்கும் இவ்வேளையில் தனது மணிவிழாவைக் கொண்டாடும் குதூகலத்தில் திளைத்துள்ளது.

இதன்தொடர்பில் எதிர்வரும் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மணி விழா, பல்வேறு இலக்கியப் போட்டி அங்கங்களுடன் நடைபெற உள்ளது என்று அதன் தலைவர் செ.குணாளன் தெரிவித்துள்ளார்.

பட்டர்வொர்த், அருள்மிகு மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தொடக்கிவைக்க இருக்கிறார். தேசிய காவல் படையின் பினாங்கு மாநில முன்னாள் தலைவரும் இலக்கிய-சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், இந்த விழாவில் கலந்து கொண்டு ‘திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறி’ எனும் தலைப்பில் இலக்கிய உரை நிகழ்த்த இருக்கிறார்.

இலக்கியப் பட்டிமன்றம், கவியரங்கம், நெல்லிக்கனி நாடகம், பண்பாட்டு நடனம், திருக்குறள் பாடலுக்கு அபிநயம், இசைப் பாட்டு அங்கம் என்றெல்லம் முழு நாள் நிகழ்வாக காலை 8:00 முதல் மாலை 5:30 மணிவரை இவ்விழா நடைபெற உள்ளது.

முத்த எழுத்தாளர்கள் மூவருக்கு இலக்கிய விருது வழங்குதல், போட்டிகளில் பங்கேற்ற எழுத்தாளர்கள், மாணவர்களுக்கு பரிசளிப்பு, இலக்கிய போட்டியாளர்களுக்குச் பினாங்கு மாநில எழுத்தாளார் சங்கத்தின் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட மேலும் பல இலக்கிய அங்கங்களுடன் இந்த மணிவிழா சிறப்பாக நடைபெற இருக்கிறது என்று பத்திரிகையாளரும் கவிஞருமான செ.குணாளன் அறிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளி-இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியுடன் சிறுகதை, மரபுக் கவிதை , புதுக் கவிதைப் போட்டிகளும் இந்த விழாவில் இடம்பெற உள்ளன. மாணவ வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், நூற்பரிசுடன் வெற்றிச் சின்னமும் வழங்கப்படும்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக, இந்த வடபுலத்து மாநிலத்தே வாழும் இந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் மொழி-பண்பாட்டு-கலாச்சாரக் கூறுகளை தற்காத்து நிலைநாட்டும் வண்ணம் தன் இலக்கியப் பயணத்தை தொய்வில்லாது மேற்கொண்டு வரும் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் இந்த மாபெரும் இலக்கிய மணிவிழாவில் இலக்கிய ஆர்வளர்கள், தமிழன்பர்கள், சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் ச.நா.வேணுகோபால் கேட்டுக் கொள்கிறார்.