LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசிய தேசத்தில்பாடாங் செராய் தேர்தலும் பிரதமரின் கம்பீரமும்:

Share

இராஜேந்திர சோழன் ஆண்ட கடார மண்ணில் தலைவிரித்தாடும் இன-மதவாதம்

பாஸ் கட்சியின் கொக்கரிப்பும் அதன் மதவாதக் கோட்டையும் விரைவில் சரியும்

-நக்கீரன்

கோலாலம்பூர், டிச.08:

மலேசிய தேசத்தில் மஞ்சள் மகிமை கொலுவீற்றிருக்கும் கெடா மாநில அரண்மனையில் ஒரு காலத்தில் புலிக் கொடிதான் பறந்து கொண்டிருந்தது. வெற்றிலைப் பயனீடு, தாம்பூல கலாச்சாரம், பல்லாங்குழி விளையாட்டு உள்ளிட்ட அத்தனையும் இன்றளவும் அந்த அரண்மனையில் வழிவழியாக பின்பற்றப்படுவதற்குக் காரணம், இராஜேந்திர பெருஞ்சோழன் நிறுவிய அரசக் கட்டமைப்பு.

இந்த மண்ணின் பூர்வ குடியினரோடு தமிழர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், சயாமியர்கள் உள்ளிட்ட பல இன மக்களும் சமய சகிப்புத்தன்மையோடும் சமூக அணுசரனையோடும் வாழ்ந்த சமதர்ம பூமியான கெடாவில் இன்று பாஸ் கட்சியால் மதவாதம் தலைவிரித்தாடுகிறது.

இல்லாவிட்டால், கெடா மாநிலத்து பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்களைத் திரட்டிக் கொண்டு நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரசியலில் மதத்தைக் கலக்கும் விதமாக தொழுகை நடத்தும் காரியத்தை பாஸ் கட்சி ஆக்கிரமித்துள்ள பெரிக்காத்தான் கூட்டணி செய்யுமா?

இன வாதத்தையும் மத வாதத்தையும் தவிர வேறு எதையும் அறியாக பாஸ் கட்சியின் ஆதிக்கம் நிறைந்துள்ள இன்றைய கெடாவில், முன்னர் தர்பார் மன்னர்களின் ஆட்சி நிலவியது. தொல் தமிழகத்தில் சங்க காலம் மறுவிய காலத்தில் களப்பிரர்கள் ஆண்டனர். ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் சமண-பௌத்த கூட்டு மரபினரின் ஆட்சி கடாரம் அழைக்கப்பட்ட அன்றைய கெடாவில் உருவானது.

களப்பிரர் ஆட்சி மூன்று நூற்றாண்டுகளில் முடிவுக்கு வந்தாலும் கெடாவில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் உருவான தர்பார் மன்னர்களின் ஆட்சி, 13 தலைமுறைகளாக தொடர்ந்து 794 ஆண்டுகளுக்கு நீடித்தது. கி.பி. 1136-ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த 13-ஆவது தர்பார் மன்னர்தான், அப்பொழுது இந்த மண்டலத்தில் உருவான இசுலாமிய மறுமலர்ச்சியின் தாக்கத்தால் இசுலாத்தைத் தழுவி, முஸாஃபர் ஷா என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இவர்தான் கெடா மாநிலத்தின் முதல் சுல்தான். அந்த வரிசையில் வந்த 28-ஆவது சுல்தானான அல்-சுல்தான் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஷாம் ஷா, சுதந்திர மலேசியாவில் இருமுறை மாமன்னராக விளங்கினார். அவருக்குப் பின் தற்பொழுது கெடாவின் சுல்தானாக இருப்பவர் மாட்சிமைக்குரிய அல்-சுல்தான் சலாகுதின்.

இத்தகைய பாரம்பரியம் கொண்ட கெடாவில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பாடாங் செராயில் நேற்று, டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் நாட்டில் புதிதாக அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமை வகிக்கும் கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கோட்டை எட்டவில்லை.

கடந்த 3 பொதுத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் பிகேஆர் கட்சிதான் வென்றது. அதுவும், கோபாலகிருஷ்ணன், சுரேந்திரன், கருப்பையா என தமிழர்களாக வென்ற இந்தத் தொகுதியில் இந்த முறை, மத-இனவாதப் போக்கு சூறாவளியாக சுழன்றடித்துள்ளது.

மலேசிய நாட்டின் இருபெரும் கூட்டணிகளான நம்பிக்கைக் கூட்டணி, தேசிய முன்னணி ஆகியவற்றின் ஆதரவு இருந்தும் அன்வார் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமட் சோஃபீ ரசாக் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் பின்னடைவை எதிர்நோக்கி இருக்கிறார்.

இந்தத் தேர்தலை இடைத் தேர்தல் என்றும் சொல்ல முடியாது; பொதுத் தேர்தல் என்றும் சொல்ல முடியாது; நவம்பர் 19-ஆம் நாள் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு 3 தினங்களுக்கு முன் பிகேஆர் வேட்பாளர் கருப்பையா அகால மரணமடைந்ததால் ஒத்திவைக்கப்பட்டு இப்பொழுது நடைபெற்றுள்ளது.

2019 நவம்பர் 16இல், மலேசிய நாட்டின் ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அப்போதைய பிரதமர் துன் மகாதீர் நிறுத்திய பெர்சத்து வேட்பாளார் 15-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் தோற்றார். அதற்குக் காரணம், மகாதீர்மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த பெரும் அதிருப்தி.

இப்பொழுது, மலேசிய நாட்டின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்று ஒருவாரம்கூட ஆகாத நிலையில், புதிய பிரதமரான அன்வாரின் வேட்பாளர் இந்த அளவுக்கு தோல்வி அடையக் காரணம் என்ன?

அடுத்தக் கட்சிகளின் எம்பி-க்களை கூச்சமில்லாமல் தவளைகளைப் போல தாவவைத்து தன் கட்சி எம்பி-க்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திய பெர்சத்துக் கட்சிக்கு அன்று அதிகாரம் துணைபோனது. துரோகத்தையும் அணிதாவுவதையுமே கொள்கையாகக் கொண்ட பெர்சத்துக் கட்சிக்கு வேறு கொள்கையோ சிந்தனையோ கிடையாது; அப்படிப்பட்ட பெர்சத்துவும் இன-மதவாதத்தைத் தவிர வேறெதையும் தெரியாத பாஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து முன்னெடுக்கும் கொள்கை ‘மலாய்-முஸ்லிம்-அதிகாரம்’ என்பது;

இந்த சிந்தனைக்கு வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட 18-வயதுக்கு மேற்பட்ட இளம் வாக்காளர்கள் எளிதாக மசிந்துள்ளனர். காரணம், இந்தத் தரப்பினரில் பெரும்பாலோர் தங்களின் ஆரம்பக் கல்வியை சமயப் பள்ளிகளின் மூலம் பெற்று, அதன்வழி சமயக்கூறுகளை அதிகம் உள்வாங்கியவர்கள்.

இருந்தபோதும், இருபெரும் கூட்டணிகளான பாரிசானையும் பக்காத்தானை-யும் சேர்த்து ஒருசேர வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் கூட்டணி என்னும் இந்த மதவாத அணிக்கு எங்கிருந்து இத்தனை ஆதரவு கிடைத்தது?.

பெரிக்காத்தான் கூட்டணி வேட்பாளர் அஸ்மான் நஸ்ருடின், பிகேஆர் கட்சியில் இருந்து பெர்சத்துக் கட்சிக்கு அணிதாவி, கரைபடிந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் என்றாலும் கெடா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

அந்த வகையில் பாஸ் கட்சி ஆளும் கெடா மாநில நிருவாக இயந்திரம், பாடாங் செராய் தேர்தலுக்கு ஒருவேளை பயன்படுத்தப்பட்டிருந்தாலும்கூட இந்த அளவுக்கு வாக்கு பெரும்பான்மை எப்படி வந்தது என்பது கேள்விக்குரியது?

மலேசிய நாட்டின் பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து கெடா சட்டமன்றத்திற்கு ஏற்கெனவே அஸ்மான் நஸ்ருடின் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கூடுதல் பலம் என்றாலும் 2018 பொதுத் தேர்தலின்போது பாடாங் செராயில் தேசிய முன்னணி பெற்ற 15,500 வாக்குகள் இந்த முறை, முகமட் சோஃபீ ரசாக்கிற்கு வராமல் போனதன் காரணம் என்ன?

2018 பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்ற 31,724 வாக்குகளைவிட இந்தமுறை 3,653 வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. 2018 தேர்தலில் பதிவான வாக்குகள் 70,084; இந்த 2022 தேர்தலில் பதிவான வாக்குகள் 91,416; இதன்படி நம்பிக்கைக் கூட்டணி கடந்தத் தேர்தலில் 45% வாக்குகளைப் பெற்ற நிலையில் இந்த முறை 39% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

மொத்தத்ததில், நம்பிக்கைக் கூட்டணியின் சொந்த வாக்கு வலிமையும் குறைந்துள்ளது; நம்பிக்கைக் கூட்டணியுடன் அணிசேர்ந்த தேசிய முன்னணியின் வாக்குகளும் அடியோடு காணாமல் போய்விட்டன.

ஒருவேளை, மலேசிய நாட்டின் அமைச்சரவையில் இந்திய சமுதாயத்திற்கு பிகேஆர் கட்சி சார்பில் வாய்ப்பளிக்கவில்லை என்பதால் அதன் தலைவரும் பிரதமருமான அன்வார்மீது இந்திய சமுதாயம் அதிருப்தி கொண்டு, பெரிக்காத்தான் பக்கம் சாய்ந்துவிட்டதா என்றெல்லாம் பல கோணங்களில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

அதேவேளை, மற்ற பிரதமர்களாக இருந்தால், இதுபோன்ற சமயங்களில் சம்பந்தப்பட்ட தொகுதியில் முகாமிட்டு ஆதரவு திரட்டுவார்கள். ஆனால், இன்றைய பிரதமர் அன்வார் அவ்வாறு செய்யாமல், நாட்டின் நிருவாக சீர்திருத்தத்தில் முழுமையாக அக்கறைக் காட்டி தன் கம்பீரத்தை நிலைநாட்டி உள்ளார்.

அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மூலம், பாடாங் செராயில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் தாக்கம் குறித்து தெரியவரலாம்.

அதற்காக, மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றிருந்தால், 36 தொகுதிகளையும் கொத்தாக வென்றிருப்போம் என்று கெடா மந்திரி பெசார்(முதல்வர்) சனூசி முகமட் நோரும் இந்த அபார வெற்றி மூலம் தன் மீது படிந்துள்ள தவளைக் கறை அகன்றுவிட்டதாக அஸ்மான் நஸ்ருடினும் தெரிவித்திருப்பது அதிகமாக கொக்கரிப்பதைப் போன்றது. இத்தகைய மன(த)க்கோட்டை விரைவில் சரியும்!