LOADING

Type to search

மலேசிய அரசியல்

நாளை தோட்ட மாளிகையில் 10 ஆயிர டாலரை வெல்லப்போகும் இலக்கியவாணர் யார்?

Share

டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் போட்டி

-நக்கீரன்

கோலாலம்பூர், டிச.15:

தேசிய நில நிதி கூட்டரவு சங்கம் கண்டுள்ள டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசு போட்டியில் 10,000 அமெரிக்க டாலரை வெல்லபோவது யார் என்ற எதிர்பார்ப்பும் பேராவலும் மலேசியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடம் பலமாக எதிரொலிக்கிறது.

மலேசிய தேசிய அளவிலும் உலக அளவிலும் தமிழ் இலக்கியப் புத்தாக்கத்தை மலரச் செய்யவும் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பு நல்கவும் உள்நாட்டு அளவிலும் பன்னாட்டு அளவிலும் புத்தகப் பரிசிப் போட்டியை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியம் கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.

தமிழ் வளர்ச்சி, எழுத்தாளர்களுக்கு தன்னூக்கம், இவ்விரண்டுக்கும் ஆதரவான நூல் பதிப்பகப் பணி ஆகியற்றை ஒருங்கிணைந்து மேம்படுத்துவதற்காகவே இந்த அறவரியாம் 2010-இல் தோற்றுவிக்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்தே ஈராண்டுகளுக்கு ஒரு முறையென தவறாமல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா காலத் தடைகூட இந்தப் பணிக்கு தடங்கலை ஏற்படுத்தவில்லை. தொடக்கத்தில் பன்னாட்டுப் போட்டிக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், தமிழகம், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளில் வாழும் தமிழர்களும் பங்குபற்றும் வண்ணம் இந்தப் போட்டி உருவாக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் வெற்றிபெறும் சூழலில், உள்நாட்டு எழுத்தாளர்களுக்கு அது ஏமாற்றமாக அமைந்துவிடக் கூடாதென்பதற்காக இந்தப் போட்டியுடன் மலேசிய அளவிலான உள்நாட்டுப் போட்டியும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

மலேசிய எழுத்தாளர்கள் இந்த இருபோட்டிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும் வேளையில் வெளிநாட்டு இலக்கியப் படைப்பாளிகள் பன்னாட்டுப் பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளாது.

மலேசியப் புத்தகப் போட்டிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நூலை இயற்றியவருக்கு 10,000 மலேசிய வெள்ளியும்(ரிங்கிட்) உலகப் போட்டி வெற்றியாளருக்கு 10,000 டாலரும் வழங்கப்பட்டு வருன்றன.

இதற்கான பணிகள் இவ்வாண்டு தொடக்கத்திலேயே முடுக்கிவிடப்பட்டு விளம்பரமும் அறிக்கையும் வெளியிடப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இப்போட்டிக்கு அணிவகுத்த நிலையில் இவை யாவும் மலேசியா, சிங்கப்பூர், தமிழ் நாடு, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடுவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில் பன்னாட்டு வெற்றியாளரும் மலேசிய வெற்றியாளரும் நாளை டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை மாலை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்த மொழி-இலக்கிய அறவாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம், அறவாரிய தலைமை இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் ஆகிய இருவரின் முன்னெடுப்பில் இலட்சக் கணக்கான வெள்ளி பொருட்செலவில் ஆறாவது முறையாக நடைபெறவுள்ள இந்த விழா தொடர்பில் 10,000 டாலர் பரிசை வெல்லப்போவது யார் என்னும் ஆவல், பேராவலாக மலேசிய இலக்கிய வட்டத்தில் எழுந்துள்ளது.

மாலை 4:30 மணி அளவில் தேநீர் உபசரிப்புடன் தொடங்கி, இரவு 8:30 அளவில் இரவு விருந்தோம்பலுடன் நிறைவுபெற உள்ள இந்த நிகழ்ச்சி, டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த இலக்கிய ஒன்றுகூடலில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.