பாகிஸ்தான் புலனாய்வுப் பத்திரிகையாளர் சைட் ஃபாவாட் அலி ஷா எங்கே?
Share
குடிநுழைவு தலைமை இயக்குநர் உடனே அறிவிக்க வேண்டும்:
-பொன்.வேதமூர்த்தி கோரிக்கை
கோலாலம்பூர், ஜன.01:
பாகிஸ்தான் புலனாய்வுப் பத்திரிகையாளரான சைட் ஃபாவாட் அலி ஷா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் இரவு 9:10 மணி அளவில், கோலாலம்பூர் லக்கி கார்டன் பெட்ரோனாஸ் நிலையத்திற்கு அருகில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபின், இதுவரை என்ன ஆனார் என்பதேத் தெரியாத நிலையில் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஸைமீ பின் டாவுட் தன் மௌனத்தைக் கலைத்து சைட் ஃபாவாட் அலி ஷாவைப் பற்றி உடனே தெரிவிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்க ஊழல் மற்றும் தீவிரவாதம், கடத்தல் குறித்தெல்லாம் துப்பறிவுக் கட்டுரைகளை எழுதி வந்த சைட் ஃபாவாட் அலி ஷா, உள்நாட்டில் பலவிதமான அச்சுறுத்தலுக்கும் மருட்டலுக்கும் ஆளான நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் மிதவாத முஸ்லிம் நாடான மலேசியாவிற்கு வந்து ஐநா அகதிகள் ஆணையத்தின் பதிவு அட்டையையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கணவர் ஷேட் ஃபாவாட் அலி ஷா-விடம் இருந்து எந்தத் தகவலும் வராத நிலையில், அவரின் கர்ப்பினி மனைவி ஷேடா, மலேசியாவிற்கு வந்து குடிநுழைவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பணியில் இருந்த அதிகாரி, சைட் ஃபாவாட் அலி ஷாவை பாகிஸ்தானிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாக மொட்டையாகத் தெரிவித்துள்ளார். மேல் விவரத்திற்காக, கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குச் சென்று விசாரித்தபோது, தூதர் அமினா பாலோச், ஐநா மன்ற அகதி தகுதிபெற்றுள்ள சைட் ஃபாவாட் அலி ஷா விவகாரத்தில் தலையிடவிரும்பவில்லை என்றும் அவரைப் பற்றி தன்னிடம் தகவல் இல்லை என்றும் கைவிரித்து விட்டார்.
தன் கணவரைப் பற்றி எந்த விவரமும் தெரியாமல் வேதனைக்குள்ளான எட்டு மாத கர்ப்பினியான ஷேடா, கருச்சிதைவுக்கும் உள்ளாகி மேலும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்.
ஒரு வழக்கறிஞர் என்னும் முறையில், ஷேடா சார்பில் கோரிக்கை வைத்துள்ள முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி, சைட் ஃபாவாட் அலி ஷாவைப் பற்றி உடனேத் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஸைமீயிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்க் நேரிடும் என்றும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.