ஒரு புதிய கூட்டு ஏன் இரண்டாகியது? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன் மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது.
தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தை கண்டுபிடிக்க முடியாமல் தங்களுக்கு இடையே இரண்டாக உடைந்து விட்டன.இந்த உடைவை தொகுத்துப் பார்த்தால் வெளிப்படையாக ஒரு விடயம் தெரிகிறது. ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகள் ஓரணியிலும் ஆயுதப்போராட்ட மரபில் வராத கட்சிகள் இன்னொரு அணியாகவும் நிற்பதைக் காணலாம்.
இது ஆயுதப் போராட்டங்களில் வந்த கட்சிகளுக்கும் ஆயுதப் போராட்ட மரபில் வராத கட்சிகளுக்கும் இடையிலான ஒரு முரண்பாடாக தோன்றும். கடந்த வாரம் நடந்த சந்திப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டுக்குள் இணைத்துக் கொள்வதற்கு விக்னேஸ்வரன் முதலில் தயக்கம் காட்டினார். ஏனைய கட்சிகள் விளக்கம் கேட்ட பொழுது ஜனநாயக போராளிகள் கட்சியை உள்ளே வைத்துக்கொண்டு அந்த விளக்கத்தை தன்னால் கூற முடியாது என்றும் அவர்களை வெளியே அனுப்பினால்தான் அந்த காரணத்தை வெளிப்படையாக சொல்லலாம் என்று கூறியிருக்கிறார். அதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பை தொகுத்துப் பார்க்கும் ஒருவருக்கு பின்வரும் கேள்வி எழும். தமிழரசு கட்சிக்கு எதிரான ஒரு பலமான கூட்டை உருவாக்க முடியாமல் போனமைக்கு காரணம்,ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளும் அந்த மரபில் வராத கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடா ? என்பதே அக்கேள்வியாகும். காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் வர்ணிப்பது போல மிலிட்டரி ஹோட்டலும் சைவ ஹோட்டலும் வேறு வேறாக நிற்கின்றனவா?
ஆனால்,கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சின்னத்தின் கீழ்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல அதற்கு முன்பு கடந்த வடமாகாண சபையில் அவர் தமிழரசுக் கட்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தபோது அவரைக் காப்பாற்றியது ஆயுதப் போராட்ட மரபில் வந்த இயக்கங்கள்தான். விக்னேஸ்வரனின் எழுச்சியென்பது ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளின் உதவியால் கிடைத்த ஒன்றுதான்.அதாவது விக்னேஸ்வரனுக்கு அசைவ ஹோட்டலில்தான் விருந்து கிடைத்தது.சைவ ஹோட்டலில் அல்ல. எனவே தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு புதிய கூட்டை உருவாக்க முடியாமல் போனமைக்கு காரணம் ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளை மிதவாத மரபில் வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியமை என்று கூறப்படும் விளக்கம் முழுமையானது அல்ல.
உண்மையான பிரச்சினை சின்னம்தான்.கூட்டின் பெயர்தான்.தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு பலமான கூட்டை கட்டி எழுப்புவது என்றால் கூட்டமைப்பு என்ற பெயர் தேவை என்று விக்னேஸ்வரன் அல்லாத ஏனைய கட்சித் தலைவர்கள் நம்பினர். கூட்டமைப்பு என்ற பெயரில் வாக்குக் கேட்டால் அதற்கென்று ஒரு வாக்கு வங்கி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதனால் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு, அதாவது ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்கள். கட்சியின் பெயர் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகும். அது புளட் இயக்கமும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் சுகு அணியும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்சியாகும். ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுகு அணியானது, தமிழ்த் தேசிய சிந்தனைக்கு வெளியே நிற்கிறது.அந்த இயக்கத்தின் சுரேஷ் அணி தமிழ்த் தேசிய சிந்தனைக்குள் நிற்கிறது.இவ்வாறு புளட்டும் ஈ.பி.ஆர்.எல்.எஃபின் சுகு அணியும் சேர்ந்து உருவாக்கிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி புதிய கூட்டமைப்பை பதிந்த பின் அதில் இருக்கும் ஜனநாயக என்ற வார்த்தையை பின்னர் நீக்கலாம் என்று மேற்படி கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.இது தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து விட்டு கூட்டமைப்பைப் பதிவது என்று பங்காளிக் கட்சிகள் திட்டமிடத் தொடங்கிய பொழுதே கருக் கொண்ட ஒரு யோசனையாகும்.
ஆனால் விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் அந்த சின்னத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.அக்கட்சியின் செயலாளராக இருப்பவர் புளட் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர் என்று அழைக்கப்படும் ராகவன்.
விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு அது என்ற அடிப்படையில் அந்த கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு விக்கி மணி அணி தயங்குகிறது.புதிய கூட்டின் மீது தனது பிடி பலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு தனது கட்சியின் சின்னத்தையே பொதுச் சின்னமாக பயன்படுத்த வேண்டும் என்றும்,தன்னை கூட்டின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் விரும்பியதாக தெரிகிறது.இவ்வாறாக சின்னம் மற்றும் செயலாளர் விடயத்தில் ஒரு பொதுக் கருத்தை எட்ட முடியாத காரணத்தால் கூட்டு உருவாகவில்லை.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பலமான கூட்டைக் கட்டியெழுப்பும் பொழுது அதில் கூட்டமைப்பு என்ற பெயர் தேவை என்று விக்னேஸ்வரன் அல்லாத ஏனைய கட்சித் தலைவர்கள் நம்புவதாக தெரிகிறது. கூட்டமைப்பு என்ற பெயர் கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்கள் மத்தியில் பதிந்திருப்பதனால், அந்த பெயருக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள்.அதுபோலத்தான் தமிழரசுக் கட்சியும் தனது வீட்டுச் சின்னத்துக்கென்று ஒரு பெரிய வாக்கு வங்கி உண்டு என்று நம்புகிறது.
பழக்கப்பட்ட ஒரு சின்னம் அல்லது பழக்கப்பட்ட ஒரு பெயர் என்பது விமர்சன பூர்வமாக சிந்திக்காத வாக்காளர்களை கவர்வதற்கு இலகுவான வழி என்று நம்பப்படுவதுண்டு. அது ஒரு விதத்தில் பொதுப் புத்தியை அதிகம் உழைப்பின்றி கவர்வதற்கான ஒரு உத்திதான். ஆனால் தமிழ் தேசியப் பரப்பில் கடந்த சில தசாப்தகால அனுபவங்களை தொகுத்துப் பார்த்தால் அது முழு வெற்றி பெற்ற ஒரு உத்தி அல்லவென்பது தெரியவரும்.
அதற்கு கீழ்வரும் உதாரணங்களைக் காட்டலாம்.இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்ற பொழுது வெளிச்சவீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட்ட ஈரோஸ் இயக்கம் பெருமளவு ஆசனங்களை கைப்பற்றியது. தமிழ் அரசியலில் ஒரு சுயேச்சை குழு அந்தளவு ஆசனங்களை அதற்கு முன்னும் கைப்பற்றவில்லை இன்றுவரையிலும் கைப்பற்றவில்லை.அங்கே சின்னம் ஒரு விவகாரமாக இருக்கவில்லை.அந்த சின்னம் அதற்கு பின் எந்த ஒரு தேர்தலிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வாக்குகளைப் பெறவில்லை.
அதேபோன்று சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றன. உதயசூரியன் சின்னம் ஒரு வெற்றிச் சின்னம் என்பதனால் அதன் கீழ் போட்டியிட்டால் அதிக வாக்குகளை பெறலாம் என்று ஒரு நம்பிக்கை நிலவியது.ஆனால் திருப்பகரமான வெற்றி அங்கே கிடைக்கவில்லை.
ஏன் அதிகம் போவான் ? கடந்த பொதுத் தேர்தலின் போது வீட்டுச் சின்னத்துக்கு வெளியே வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் மூன்று வெவ்வேறு தரப்பினருக்கு வழங்கினார்கள். முதலாவது தரப்பு,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.இரண்டாவது,விக்னேஸ்வரனின் கட்சி.மூன்றாவது, வியாழேந்திரன்.
எனவே சின்னந்தான் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்று நம்புவது சரியா ?அதே போல பழக்கப்பட்ட ஒரு பெயரை வைத்து விமர்சன பூர்வமாக சிந்திக்காத வாக்காளர்களின் கூட்டு உளவியலை கையாளலாம் என்று நம்புவதும் சரியா?
சின்னங்கள் குறியீடுகள்தான்.பெயர்களும் குறியீடுகள்தான். ”வார்த்தைகள் அர்த்தங்களால் சுமையேற்றப்படுகின்றன” என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூறுவார். வார்த்தைகளுக்கும் சின்னங்களுக்கும் மந்திர சக்தியை கொடுப்பது கட்சிகளின் வேலை. செயற்பாட்டாளர்களின் வேலை. ஒரு கட்சி எந்தளவு கடுமையாக உழைக்கிறது என்பதில்தான் அது தங்கியிருக்கிறது.எனவே தமிழரசுக் கட்சிக்கு சவாலாக எழுவது என்பது, சின்னங்களிலும் பெயர்களிலும் தங்கியில்லை.விசுவாசமான உழைப்பில்தான் தங்கியிருக்கிறது.
சிறந்த தலைவர்கள் சின்னங்களை உருவாக்குகிறார்கள்.வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள்.சின்னங்களுக்கும் வார்த்தைகளுக்கும் மந்திர வலிமை ஏற்றுகிறார்கள்.
இது தொடர்பில் இரண்டு விடயங்களை அழுத்திச் செல்லவேண்டும். முதலாவது, தமிழரசுக் கட்சிக்கு எதிராக என்று சிந்திப்பதே தவறு. அது அதன் உளவியல் அர்த்தத்தில் தமிழரசுக் கட்சியின் பலத்தைக் குறித்த தாழ்வுச்சிக்கலையுங் குறிக்கும். மாறாக தேசத் திரட்சியை கட்டியெழுப்புவதற்காக என்று சிந்திப்பதே சரி. அதுதான் ஆக்கபூர்வமானது. இது முதலாவது.இரண்டாவது விடயம், கட்சிகளின் வெற்றி என்பது சின்னங்களிலும் பெயர்களிலும் தங்கியிருப்பதில்லை.நவீன தகவல் தொடர்பு யுகத்தில் கட்சிகளின் வெற்றிக்குரிய விளம்பர உத்திகளையும் பிரச்சார உத்திகளையும் வகுத்துக் கொடுப்பதற்கென்றே தொழிற்சார் வல்லுநர்கள் வந்து விட்டார்கள்.அவர்கள் நினைத்தால் சின்னங்களையும் பெயர்களையும் திட்டமிட்டு ஸ்தாபிப்பார்கள். ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்குவார்கள். எனவே இந்தச் சின்னம்தான் வேண்டும்,இந்தப் பெயர்தான் வேண்டும் என்ற மாயைகளில் இருந்து புதிய கூட்டுக்கள் விடுபடவேண்டும். தமிழ் மக்களையும் அந்த மாயைகளில் இருந்து விடுவிக்க வேண்டும்.
மாயைகளில் மூழ்கிக் கிடந்தால் மெய்மையை கண்டுபிடிக்க முடியாது. மெய்மையை கண்டுபிடித்தால்தான் பொருத்தமான உழைப்பைக் கொட்டி வார்த்தைகளையும் சின்னங்களையும் மந்திரசக்தி மிக்கதாக மாற்றலாம். எல்லாவற்றிற்கும் கடும் உழைப்பு வேண்டும். வியட்நாமிய புரட்சியின் தந்தை கோஷிமின் கூறியது, புதிய கட்சிக் கூட்டுக்களுக்கும் பொருந்தும். “மக்களிடம் செல்லுங்கள்,மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், மக்கள் உங்களுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருவார்கள் “