ஸ்காபுறோவில் விழாவில் நீயா நானா? புகழ் கோபிநாத் அவர்களுக்கு மத்திய, மாகாண மற்றும் மாநகர அரசாங்கங்களின் சார்பில் உயரிய கௌரவம்..
Share
கனடாவில் ஸ்காபுறோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் முறையே Centre for Youth Empowerment and Community Services- Toronto வின் ‘கோபிநாத்துடன் ஒரு மாலைப் பொழுது” மற்றும் தமிழ் மரபுத் திங்கள்-2023’ ஆகிய விழாக்களில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பெற்ற நீயா நானா? புகழ் கோபிநாத் அவர்களுக்கு ஸ்காபுறோவில் விழாவில் மத்திய, மாகாண மற்றும் மாநகர அரசாங்கங்களின் சார்பில் உயரிய கௌரவம் வழங்கப்பெற்றது.
கடந்த 14-01-2023 அன்று மாலை ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதலில் பைரவி இசைக்குழுவின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து திருமதி சில்வியா பிரான்சிஸ் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து கோபிநாத் அவர்கள் மேடையில் தோன்றி அனைவருக்கும் ‘வணக்கம்’ கூறினார்.
பின்னர் அவருக்கு Centre for Youth Empowerment and Community Services- Toronto அமைப்பின் சார்பாக அதன் தலைவர் திரு சங்கர் நல்லதம்பி மலர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து கோபிநாத் அவர்களுக்கு மத்திய, மாகாண மற்றும் மாநகர அரசாங்கங்களின் சார்பில் உயரிய கௌரவம் வழங்கப்பெற்றது மத்திய அரசின் சார்பான கௌரவத்தை ஸ்காபுறோ வடக்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் MPP Shaun Chen அவர்கள் வழங்கினார்.
ஒன்றாரியோ மாகாண அரசின் சார்பாக ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அவர்களின் வாழ்த்துச் செய்தியை மாகாண பாராளுமன்ற உறுப்பினர் MPP Logan Kanapathi MPP Aris Babikian- ஆகியோர் வழங்கி தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
தொடர்ந்த ரொறன்ரோ மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேயர் அவர்களின் வாழத்துச் செய்தியை மாநகர கவுன்சிலர்கள் Nick Mantus Jamaal Myers ஆகியோர் வழங்கினார்கள்.
தொடர்ந்து இந்த விழாவை முன்னின்று ஏற்பாடு செய்த லோகேந்திரலிங்கம் அவர்களின் சிற்றுரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அன்றைய நாளின் முக்கிய உரையை வழங்க கோபிநாத் அவர்கள் ஒலிவாங்கிக்கு முன்பாக வந்தார். மண்டபம் நிறைந்த ரசிகர்களின் வாழ்த்தொலிகளுக்கிடையில் அவரது உரை இடம் பெற்றது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற அவரது உரையை பார்வையாளர்கள் ரசித்த வண்ணம் செவிமடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மேடைக்கு அழைக்கப்பெற்று பாராட்டுப் பத்திரம் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றனர். தொடர்ந்து ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கௌரவிக்கப்பெற்றனர்.
இறுதியில் கோபிநாத் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விழாவிற்கு வருகை தந்த அனைத்து ரசிகர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோரோடும் புகைப்படங்கள் எடுக்கப்பெற்றன
செய்தியும் படங்களும்:- சத்தியன்-கனடா உதயன்