LOADING

Type to search

மலேசிய அரசியல்

ஈராண்டு இடைவெளிக்குப்பின் பத்துமலை திருமுருகன் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

Share

-நக்கீரன்

பத்துமலை, ஜன.31:

2023-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மலேசிய இந்து சமயத்திற்கே உரிய பாரம்பரிய கோலாகலத்துடனும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்து சமயத்தின் ஆன்மிக நெறியில் அறிவின் பெட்டகமாகவும் முக்தியின் வெளியீடாகவும் கௌமார வழிபாட்டு முறையின் நாயகனாகவும் திகழும் திருமுருகக் கடவுளுக்கான வேண்டுதலையும் பரிகார நிறைவேற்றுதலையும் கடந்த ஈராண்டுகளாக நிறைவேற்ற முடியாத பக்த அன்பர்கள் இந்த ஆண்டு தைப்பூச நந்நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதால், இவ்வாண்டு பக்தர்கள், சுற்றுப் பயணியர், வேடிக்கை பார்ப்போர் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய 16 இலட்ச பக்தர்களை எதிர்பார்ப்பதாக, இதன் தொடர்பில் பத்துமலை முருகன் ஆலய வளாக அலுவலகத்தில் ஜனவரி 31, பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

இந்த விழாவின் தொடக்கமாக, பிப்ரவரி 3, வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் தாய்க் கோயில் என்று வருணிக்கப்படும் அருள்மிகு கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து இரதம் புறப்பட இருக்கிறது.

கோலாலம்பூர் துன் எச்.எஸ்.லீ சாலை, துன் பேராக் சாலை, சுல்தான் அஸ்லான் ஷா(ஈப்போ) சாலை, கூச்சிங் சாலை என்றெல்லாம் 18 இடங்களைக் கடந்து அடுத்த நாள் பிற்பகலில் பத்து மலை ஆலய வளாகத்தை இரதம் வந்து சேரும் என்றும் தொடர்ந்து சேவற்கொடி ஏற்றப்பட்ட பின்னர், தைப்பூச விழா முறையாகத் தொடங்கும் என்றும் நடராஜா செய்தியாளர்களிடம் சொன்னார்.

தைப்பூசத் திருவிழா தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று தெரிவித்த அவர், இதன் தொடர்பில் போதிய ஒத்துழைப்பை வழங்கிவரும் கோலாலம்பூர் மாநகர் மன்றம், செலாயாங் நகராட்சிக் கழகம் மற்றும் பாதுகாப்பு பணி தொடர்பில் செந்தூல் மாவட்ட காவல் நிலையம், கோம்பாக் மாவட்ட காவல் நிலையம் மற்றும் கோலாலம்பூர் கேம்பல் சாலை காவல் அலுவலகங்களுக்கும் ஒருசேர நன்றி தெரிவித்தார் நடராஜா.

பக்தர்கள் ஏந்தும் காவடி, பால் குடம் தொடர்பான கட்டணம், காவடி-பால்குடம் ஏந்துவதற்கு முன் அருகில் உள்ள ஆற்றங்கரையில் விதிக்கப்படும் கட்டணம் குறித்து எழுந்த குறைகூறல்களுக்கு விளக்கம் அளித்த நடராஜா, “ஆலய வளாகத்திற்கு வெளியே முடி காணிக்கை உட்பட அனைத்திற்கும் மற்றவர்கள் விதிக்கும் கட்டணத்திற்கு தேவஸ்தானம் பொறுப்பேற்க முடியாதென்றும் ஆலய நிருவாகத்தைப் பொறுத்தவரை காவடிக்கும் பால்குடத்திற்கும் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தவிர, பக்தர்களுக்கு ஏதும் குறை இருந்தால், அதைப்பற்றி ஆலய நிருவாகத்துடன் பேசுவதைத் தவிர்த்துவிட்டு சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிடுவது பொருத்தமல்ல என்றார்.

பத்துமலை வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக-வும் அடுத்த ஆண்டு தைப்பூச விழாவின்போது சிறப்பான மாற்றங்களைக் காண்பீர்கள் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

தைப்பூச விழா, முருகக் கடவுக்குரிய வழிபாடு என்பதால், முருகன் தொடர்பான அலங்காரக் காவடிகளை மட்டும் பக்தர்கள் ஏந்த வேண்டும் என்றும் பொருத்தமில்லாத வகையில் சுருட்டு-சாட்டையுடன் வரும் காவடிகள் தடைசெய்யப்படும் என்றும் தெரிவித்தார். ஒருசிலர் ஆன்மிகத் தெளிவில்லாமல் அனுமன்-கிருஷ்ணர் உருவம் பொறித்த காவடிகளை பஜனைப் பாடலுடன் சுமந்து வருவதையும் ஆண்டுதோறும் காணமுடிகிறது. ஒலிபெருக்கியைப் பயன்படுத்தும் காவடித் தரப்பினர் சீரான வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆலய வாளாகத் தூய்மைக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் குப்பைகளை கண்ட இடத்த வீச வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் சார்பில் அன்னதானம் செய்யப்படும்; பிப்ரவரி 4-ஆம் நாள் முன்னிரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது; தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் பாரம்பரிய ஆடையுடன் வரவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதால், அவர் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்ற தகவலையும் நடராஜா தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்க் கூட்டத்தில் மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறி செம்மல்’ தங்க கணேசன், செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜி.குணராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.