ஜனவரி மாதத்திற்கான ஐசிசி விருது… பரிந்துரைப் பட்டியலில் சுப்மன் கில், முகம்மது சிராஜ்
Share
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாதம்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊக்கப்படுத்தி வருகிறது. வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மாதம்தோறும் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜனவரி மாதம் நடந்த இலங்கை மற்றும நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து தரப்பில் பேட்ஸ்மேன் டெவோன் கான்வே தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 360 ரன்களை குவித்து சுப்மன் கில் சாதனை படைத்தார். நிலையான ஆட்டத்தால் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். டி20 போட்டிகளிலும் கில்லின் ஆட்டம் பிரம்மிக்க வைக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கில் சாதனை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் சுப்மன் கில் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று ஜஸ்பிரித் பும்ரா கடந்த சில மாதங்களாக காயத்தால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது இடத்தில் விளையாடி வருபவர் முகம்மது சிராஜ். ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை குவித்து வரும் சிராஜ் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் முகம்மது சிராஜ் இடம்பெற்றுள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் என்ற சவாலை சிராஜ் எதிர்கொள்கிறார். ஒருநாள் போட்டிகளைப் போன்று டெஸ்டிலும் சிராஜ் முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.