LOADING

Type to search

விளையாட்டு

‘ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை துபாய்க்கு மாற்றுவதே சிறந்தது’ – பாக். முன்னாள் வீரர் அதிரடி

Share

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை துபாய்க்கு மாற்றுவதே சிறந்தது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் அப்துல் ரசாக் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்த தொடர் அந்நாட்டில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொந்தளிப்பில் உள்ளது. குறிப்பாக துபாயில் ஆசிய கோப்பை தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் அதில் இந்தியா பங்கேற்காது என்று ஜெய் ஷா அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காது என அந்நாட்டு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

இவ்வாறு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு இடையே மோதல் முற்றியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியதாவது- ஆசிய கோப்பை தொடரை துபாயில் நடத்தினால் அது கிரிக்கெட்டிற்கு பயனுள்ளதாக அமையும். துபாயை நான் சரியான தேர்வு என்று கூறுவேன். ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் இந்த போட்டியை நடத்துவது நல்லதொரு விளம்பரமாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.