கடன்வாங்கிச் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாடு ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்“
இப்படி பேசி இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது.
அது ஒரு நல்ல உரை. வெளிப்படையாக சில உண்மைகளை பேசுகிறது ஆனால் தமிழ் நோக்கு நிலையில் அந்த உரை தொடர்பாக தொடர்பில் கேள்விகள் உண்டு.
நாங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இதை எப்பொழுது கூறுகிறார்? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளின் பின் கூறுகிறார். அப்படி என்றால் 2009 ஆம் ஆண்டு ராஜபக்ச சகோதரர்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே? அல்லது அது சுதந்திரமே இல்லையா?
ராஜபக்சக்கள் யாருக்காக நாட்டை மீட்டுக் கொடுத்தார்களோ, அந்த மக்களே இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதை தனது உரையில் ரணில் குறிப்பிடுகிறார்.அண்மையில் முகநூலில் ஒரு மூத்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளரின் மகன் ஒரு பதிவை போட்டிருந்தார். தான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்கள் எப்படி நாட்டை விட்டு வெளியேறலாம் என்பதைப் பற்றியே கதைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் வசித்த ஒரு ஊடகவியலாளர் சொன்னார்… அக்காலகட்டத்தில் ஒன்றில் சாலை கடற்கரையை அல்லது வங்கக் கடலைப் பார்த்தபடி எந்த வழியால் தப்பி போகலாம்? எப்பொழுது தப்பி போகலாம்? என்று சிந்தித்ததை ஒத்த நிலைமை இது. அக்காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தப்பிப் போவதைப் பற்றியே சிந்தித்தார்கள். 13 ஆண்டுகளின் பின் இப்பொழுது நாடு முழுவதும் அந்த நிலைமை வந்திருக்கிறது.
அப்படி என்றால் ராஜபக்சே வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே ?அல்லது அது சுதந்திரமே இல்லையா?
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ராஜபக்சக்கள் தோற்கடித்தார்கள். ஆனால் அதற்காக அவர்கள் எந்தெந்த நாடுகளிடம் கையேந்தினர்களோ அந்த நாடுகளிடம் நாட்டில் ஏதோ ஒரு பகுதியை அல்லது ஏதோ ஒரு வளத்தை இழந்து விட்டார்கள். சீன விரிவாக்கம், அதற்கு எதிரான இந்தோ பசிபிக் வியூகம், குவாட் வியூகம் என்பதற்குள் இச்சிறிய நாடு சிக்கிவிட்டது. நாட்டின் துறைமுகங்களில் ஒன்றாகிய அம்பாங்கோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எழுதி பெற்றுக் கொண்டு விட்டது. கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே சீனா ஒரு துறைமுகப் பட்டினத்தை கட்டியெழுப்பி விட்டது. அத்துறைமுகப் பட்டினத்துக்கு நாட்டில் உள்ள மாகாண சபைகளை விடவும் சில அதிகாரங்கள் விசேஷமாக கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. தன் சொந்த மக்களுக்கு கொடுக்க தயாரற்ற அதிகாரங்களை பிறத்தியாருக்கு கொடுக்கிறது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு. ஒரு காலம் தேரவாத சிங்கள பௌத்தத்தின் மரபுரிமை சின்னங்களே இந்த நாட்டின் அடையாளங்களாக இருந்தன. ஆனால் இப்பொழுது சீனா கட்டிக் கொடுத்த தாமரை கோபுரந்தான் நாட்டின் நவீன அடையாளமாக மாறியிருக்கிறது. சீன விரிவாக்கத்தின் பலனாக இலங்கை தீவின் வரைபடமே மாறிவிட்டது.
சீன விரிவாக்கத்துக்கு எதிராக இந்தியா தனது நிலைகளை இச்சிறிய தீவுக்குள் பலப்படுத்த முற்படுகின்றது. குறிப்பாக வடக்கில் கடலட்டை ஒரு ராஜதந்திர பொருளாக மாறிவிட்டது.அது மட்டுமல்ல போரில் வென்றெடுத்த சுதந்திரம் ராஜபக்சக்களை பெருமளவுக்கு நாட்டுக்குள்ளே முடக்க தொடங்கிவிட்டது. அமெரிக்க கண்டத்தில் அவர்கள் பயணம் செய்யவும் சொத்துக்களை முதலீடு செய்யவும் தடை உருவாகியிருக்கிறது.அது போன்ற தடைகள் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும்.ராஜபக்சங்களுக்கு அமெரிக்க கண்டத்தில் மட்டும் தடையில்லை, உள்நாட்டிலும் அவர்களுக்கு கடந்த ஆண்டு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால்தான் மூத்த ராஜபக்சக்கள் நாட்டின் படைத் தளங்களில் ஒழிந்தார்கள். அல்லது நாடு விட்டு நாடு ஓடிக்கொண்டிருந்தார்கள். சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அவர்கள் வென்று கொடுத்த நாட்டிலேயே அவர்களுக்கு நிம்மதியாக உறங்க முடியாமல் போய்விட்டது. ஏன் இந்த நிலை வந்தது? அப்படி என்றால் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன?
யுத்தம் தான் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது என்றால்,யூத்தம் முடிந்த பின்னரும் ஏன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை? நாடு ஏன் அதன் முதலீட்டுக் கவர்ச்சியை இழந்தது?
ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றவும் முடியாது. ஏனென்றால் நாட்டின் மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினரை பூச்சி, புழுக்களைப் போல கொன்று குவித்துப் பெற்ற வெற்றியது. ஒரு இனப்படுகொலையை அரசியல் தீர்வாக மாற்ற முடியாது. மாறாக இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான் அரசியல் தீர்வாக அமைய முடியும். அதைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள். முழுமையான 13ஐ அல்ல.
ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார். ஆனால் சுதந்திர தின விழாவன்று அவரால் அப்படிப்பட்ட அறிவிப்பு எதனையும் வெளியிட முடியவில்லை.அவர் கொழும்பில் 200 மில்லியன் ரூபாய் செலவில் சுதந்திர தினத்தை கொண்டாடிய பொழுது, தமிழர் தாயகத்தில் சுதந்திர தினம் ஒரு கரி நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி தமிழ் மக்கள் ஊர்வலம் போனார்கள். தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பது இதுதான் முதல் தடவை அல்ல. கடந்த 65 ஆண்டுகளாக அவர்கள் அவ்வாறுதான் அனுஷ்டித்து வருகிறார்கள். 1957 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டது. அந்த அழைப்பை ஏற்று திருமலையில் நடராஜன் என்றழைக்கப்படும் இளைஞர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறி கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடியை அகற்றி கறுப்பு கொடியை கட்ட முற்பட்டார்.அவரை திருக்கோணமலை சந்தையில் வியாபாரியாக இருக்கும் ஒரு சிங்களவர் வேட்டை துவக்கினால் சுட்டு வீழ்த்தினார். இன்றைக்கு வரையிலும் நடராசனுக்கு நீதி கிடைக்கவில்லை.தமிழ் மிதவாதிகளால் தூண்டிவிடப்பட்டு தமிழ் இளைஞர்கள் எத்துணை துணிகரமான செயல்களில் இறங்க முடியும் என்பதற்கு நடராசன் முதலாவது முன்னுதாரணம். தமிழ் மக்களின் போராட்டத்தில் முதல் வித்து அவர். நடராசனுக்கு பின் அவ்வாறு துணிகரமாகத் தங்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை, கல்வியை, இழந்த தியாகிகளின் மிக நீண்ட பட்டியல் தமிழ் மக்களிடம் உண்டு. ஆனாலும் நடராசன் சுட்டு வீழ்த்தப்பட்டு 65ஆண்டுகளின் பின்னும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சுதந்திர தினம் கரிநாளாகவே காணப்படுகிறது.
ஆனால் நடராசனை கருப்புக்கொடி ஏந்துமாறு தூண்டிய தமிழ் மிதவாதிகள் பின்னாளில் தாங்களே சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி அசைத்தார்கள். கொல்லப்பட்ட நடராசனை அதைவிடக் கேவலமாக அவமதிக்க முடியாது.அவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலகட்டத்தில், சுதந்திர தின விழாவில் பங்குபற்றிய தமிழ்த் தலைவர்கள், இப்பொழுது மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் காந்திக் குல்லாயும் கறுப்புக் கொடியுமாக நிற்கிறார்கள்.அவர்கள் எதற்காக காந்திக் குல்லாய் அணிந்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் அவர்களுடைய நடப்பு அரசியலை வைத்து பார்க்கும் பொழுது, அவர்களுடைய தோற்றம் வினோத உடைப் போட்டியில் வேசமிட்டு வந்தவர்களைப் போல காணப்பட்டது. அவர்கள் விதவிதமான வினோத உடைகளை அணிந்து தமிழ் மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள்.
ஆனால் ஜனாதிபதி 13தான் தீர்வு என்று கூறுகிறார்.இக்கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்ட உரையில் அவர் பின்வருமாறு கூறுகிறார்….”ஒற்றையாட்சி அரசில்,அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” அதாவது 13ஐ முழுமையாக அமல்படுத்தப் போவதாக அவர் கூறவருகிறார். அதில் கூட அவர் விசுவாசமாக இருப்பாரா என்பது சந்தேகம் தான். சில கிழமைகளுக்கு முன்பு கொழும்புக்கு வருகை தந்த South Korea Disaster Relief Foundation என்ற அமைப்பின் தலைவர் சந்திப்புக்குப் பிந்தி வந்த ராஜாங்க அமைச்சரை விமர்சித்தபொழுது பின்வருமாறு கூறினார்…”பொய்களை சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கையில் சாதாரண விடயமாகிவிட்டது அது இலங்கையின் கலாச்சாரமாகிவிட்டது”.
அதுதான் உண்மை. தமது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இல்லாத சிங்கள பௌத்த தலைவர்கள் என்றைக்குமே இறந்த காலத்துக்கு பொறுப்பு கூறப்போவதில்லை. இறந்த காலத்துக்கு பொறுப்பு கூறவில்லை என்றால் நிகழ்காலமும் இல்லை: வருங்காலமும் இல்லை.ரணில் விக்கிரமசிங்க கூறுவது போல நாட்டுக்கு சுதந்திரம் இல்லை. உள்நாட்டுப் போர் நாட்டின் சுதந்திரத்தை இல்லாமல் செய்து விட்டது.தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் இல்லை : முஸ்லிம்களுக்கும் சுதந்திரம் இல்லை என்பதைத்தான் கடந்த 13 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன. கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளில் சொன்னால் “ஒடுக்கும் இனம் என்றைக்குமே நிம்மதியாக இருக்க முடியாது“. அதாவது அது சுதந்திரமாகவும் இருக்க முடியாது. ஒரே ஒரு விடயத்தில்தான் இப்போதைக்கு சுதந்திரமாக இருக்கலாம்.கடன் வாங்குவதற்கான சுதந்திரம்.