LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் கனேடிய மையம் ஒன்றை அமைக்க வேண்டுகோள்

Share

(உதயன் பிரத்தியேகச் செய்தி)

யாழிலிருந்து நடராராசா லோகதயாளன். 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்திய கலாசார மையம் போன்ற ஒரு ஏற்பாட்டை கனடாவும் யாழ்ப்பாணத்தில் விரைவாக அமைத்துத்தர வேண்டும் என்று யாழ் மாநகர முதல்வர் கனேடியத் தூதரிடம் வேண்டியுள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதர் எரிக் வால்ஷ் முதல் முறையாக யாழ்ப்பாண குடாநாட்டிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை(13) வந்தார். முதல் சந்திப்பாக யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னால்டைச் சந்தித்து உரையாடினார் என்று அங்கிருந்த எமது செய்தியாளர் கூறுகிறார்.

கனேடிய அரசு யாழ்ப்பாண மாநகர சபை மூலமாகஅபிவிருத்திக்கான `வரைவு திட்டம்` (master plan) ஒன்றை தயாரித்து வருவதையும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்படுகிறது என்பதையும் தூதருக்கு மாநகர முதல்வர் நினைவூட்டினார்.

கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி ஆகியோரின் அனுசரணை மற்றும் ஒருங்கிணைப்புடன் அந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அதை விரைவுபடுத்த தூதர் நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கனடாவில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள் கனேடிய தமிழ் காங்கிரஸ் மூலம் அந்நாட்டின் உதவியை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது மிகவும் ஆறுதல் அளிப்பதால் உள்ளது என்றும், அண்மையில் அவர்கள் ஒருங்கிணைப்புடன் தலைநகர் ஒட்டாவாவில் நாட்டின் நிதியமைச்சர் ஒருவருடன் தான் சந்தித்ததையும்- அவர்கள் நிதியுதவி எதையும் அளிக்க முடியாது என்று கூறினாலும்-அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்று கூறியதையும் கனேடியத் தூதரிடம் ஆர்னால்ட் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் “கனேடிய கோர்னர்” என்ற ஒரு மையம் அமையுமாயின் மாநகர வளர்ச்சி, கனடாவிலுள்ள தமிழர்களுடன் யாழிலிருந்து கனடா செல்வதற்கான விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பது, வர்த்தக முதலீடுகள் மற்றும் உறவுகளை மேம்படுத்துவது, தாய் நாடு வரும் கனேடியத் தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல விடயங்களை இந்த மையம் கவனிக்க முடியும் என்று மாநகர மேயர் தூதருக்கு விளக்கினார்.

இந்த வேண்டுகோள் தொடர்பில் தமது அரசுடன் பேசுவதாக தூதர் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை அலுவலகத்தில் (மாலை 5 மணி அளவில்) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது மாநகர சபையின் தற்போதைய நிலவரம் நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் மாநகர சபை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமை தொடர்பிலும் மாநகர முதல்வர் கனேடியத் தூதுவருக்கு முதல்வர் எடுத்துக் கூறினார்.

1983ஆம் ஆண்டு நிலைக்கு 13ஆம் திருத்தச் சட்டம் என ஒன்று உருப்படி இல்லாமல் கொண்டு வந்தபோதும் 36 வருடங்கள் பல வடிவங்களில் பல லட்சம் பேரின் இறப்பிற்குப் பின்பும் அந்த 13ஐ பற்றியே பேசும் நிலையிலேயே கொழும்பு உள்ளது.

1990ஆம் ஆண்டு குடாநாட்டில் பதினோரு லட்சம் மக்கள் வாழ்ந்தனர், எனினும் தற்போது ஏழு லட்சத்திற்கும் குறைவானவர்களே வாழ்வதாகவும், கனடாவில் நான்கு லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும் கூறிய மாநகர முதல்வர், இலங்கையில் நிலவும் அரசியல், சமூக, பொருளாதார சீரழிவு மற்றும் ஸ்திரமற்ற நிலையே இதற்குக் காரணம் என்பதையும் அவரிடம் குறிப்பிட்டார்.

அனைத்து அதிகாரங்கள் மற்றும் முடிவுகள் தமது வசமே இருக்க வேண்டும் என்று கொழும்பு ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்கள் என்றும் இதன் காரணமாக தமிழர் தாயகப் பகுதிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதையும் ஆர்னால்ட் தூதர் எரிக் வால்ஷிடம் கூறினார்.

யாழ் பல்கலைக்கழகத்திற்கும் விஜயம்

கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும்  சென்றார். கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே கனேடியத் தூதுவர் தலைமையிலான குழு பல்கலைக்கழகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி எஸ். கே. கண்ணதாஸன் ஆகியோருடனும், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை மாணவர்களுடனும் கனேடியத் தூதுவர் கலந்துரையாடி, நிலைமைகளைக் கேட்டறிந்தார்.