LOADING

Type to search

மலேசிய அரசியல்

44-ஆவது தேசிய திருமுறை விழா இந்து சங்கத் தலைவர் அறிவிப்பு

Share

-நக்கீரன்
பெட்டாலிங் ஜெயா, பிப்.15:

மலேசிய இந்து சங்கத்தின் சமய விழாக்களில் முதன்மை விழாவாகக் கொண்டாடப்படுவது தேசியத் திருமுறை விழாவாகும். அதன்படி நிகழும் 2023-ஆம் ஆண்டு தேசியத் திருமுறை விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19-ஆம் நாள் காலை 8:00 மணி முதல் பத்துமலை தமிழ்ப் பள்ளி வளாகத்தில் முழு நாள் விழாவாக நடைபெற உள்ளது என்று இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த 44-ஆவது தேசியத் திருமுறை விழாவின் தொடக்க விழாவை பினாங்கு மாநிலத் துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும் சமூகக் காவலருமான பேராசிரியர் பி.இராமசாமி தொடங்கிவைக்க இருக்கிறார்.

முதல் அங்கமான காலை நிகழ்வில் திருமுறை ஓதுதல், பஞ்ச புராணம் ஓதுதல், பதிக பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன. தேசிய அளவில் 9 மாநிலங்களில் இருந்து 540 போட்டியாளர்கள் பங்குகொள்ளும் காலை நிகழ்வில் பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் சதீஷும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள இருக்கிறார்.

பகல் உணவைத் தொடர்ந்து பிற்பகலில் தொடங்கவிருக்கும் அடுத்த அங்கத்தில் தங்கப் பதக்கத்திற்கான சிறப்பு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இதில், மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு.சரவணன், மஇகா தேசிய முன்னாள் தலைவரும் சுகாதாரத் துறை மேநாள் அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இருவரும் தலைமையேற்க இருக்கின்றனர்.

தொடர்ந்து 3:00 மணி அளவில் நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில், கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா கலந்துகொள்ள இருக்கிறார். கொடைநெஞ்சரும் வர்த்தகப் பிரமுகருமான டத்தோஸ்ரீ சரவணனும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாகக் கலந்து கொள்கிறார்.

மலேசிய இந்து சங்கத்தின் இந்த பாரம்பரிய நிகழ்ச்சிக்கு மாநில-வட்டாரப் பேரவைகளின் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்குவதுடன் இதில் கலந்தும் சிறப்பிக்கும்படி இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஸ்ரீகாசி-சங்கபூஷன்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.