LOADING

Type to search

இலங்கை அரசியல்

பிரபாகரன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்தும் தமிழீழ விடுதலை ஆதரவு தலைவர்கள் புறக்கணிப்பு? – தஞ்சை வந்தும் நெடுமாறனை சந்திக்காமல் சென்ற வைகோ

Share

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் முன், அதுதொடர்பாக விவாதிக்க தமிழீழ விடுதலை ஆதரவு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் அதனை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அறிவிப்பு வெளியிடும் முதல் நாள் இரவு தஞ்சாவூர் வந்த வைகோ,பழ.நெடுமாறனை சந்திக்காமலேயே மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், பிப்.13-ம் தேதி காலை11 மணிக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கியமான அறிவிப்பை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட உள்ளதாகவும், அதில் தமிழீழ விடுதலை ஆதரவுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் எனவும், முதல்நாள்(பிப்.12) இரவு பத்திரிகையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழீழ ஆதரவுதலைவர்களான வைகோ, திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் முற்றத்துடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, பிப்.12-ம் தேதி இரவு தஞ்சாவூர் வந்த வைகோ, தமிழ்நாடு ஓட்டலில் அறை எண் 22-ல் தங்கி இருந்தார். அப்போது, அவர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட யாரையும் சந்திக்கவில்லை. மேலும், மற்ற தலைவர்கள் யாரும் வராத நிலையில், மறுநாள்(பிப்.13) காலை 7.30 மணிக்கு வைகோ அறையை காலி செய்துவிட்டு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றோரும் தஞ்சாவூர் வரவில்லை.

இதனிடையே 13-ம் தேதி காலை 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் விருப்பத்தின்பேரில் இதைத் தெரிவிப்பதாகவும் கூறினார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அதில் குறிப்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், ”பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர்உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அந்த போராளிகள், பழ.நெடுமாறன் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி பிரபாகரன் நலமுடன் இருந்தால், அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வேறு ஏதும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

வைகோ சந்திக்காதது ஏன்? – தஞ்சாவூரில் கட்சிப் பணி எதுவும்இல்லாத நிலையில், பிப்.12- ம் தேதி இரவு தஞ்சாவூர் வந்த வைகோ,பழ.நெடுமாறனை சந்திக்காமலேயே மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றது ஏன் எனவும், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பை வைகோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா அல்லது பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பில் வேறு ஏதும் உள்நோக்கம் உள்ளதா எனவும் தமிழீழ பற்றாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக தஞ்சாவூர் மதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ”மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூருக்கு வந்து சென்ற பின்னரே, அவர் இங்கு வந்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. கட்சி நிகழ்வுகள் ஏதும் இல்லை. பிரபாகரன் குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை தெளிவாக உள்ளது. இதைத் தான் நாங்கள் கூற முடியும்” என்றனர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ”தஞ்சாவூருக்கு வைகோ வந்திருந்தும், அவர் பழ.நெடுமாறனை சந்திக்காமல் சென்றதற்கு சில அரசியல் காரணங்கள் இருக்கலாம்” என்றார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றோருக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் வராதது ஏன் என்று தெரியவில்லை என பழ.நெடுமாறன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

உளவுத்துறை கண்காணிப்பு: இதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தங்கியிருக்கும் பழ.நெடுமாறனின் நடவடிக்கைகளை உளவுத் துறை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.