3ஆவது டெஸ்டில் 2 முக்கிய வீரர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி
Share
இந்திய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களுடன் ஆஸ்திரேலியா களத்தில் இறங்கவுள்ளது. மீதம் உள்ள 2 போட்டிகளிலாவது இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு அணியின் ரசிகர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் உலகளவில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை வகிக்கிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2 டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவால் 3 நாட்களுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் அணியில் இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுகிறார். இதற்கிடையே, வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.
இவ்விருவரும் முக்கிய ஆட்டக்காரர்களாக பல்வேறு முறை தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி அடுத்த 2 போட்டிகளில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, சொந்த வேலை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயகம் திரும்பியுள்ளார். மார்ச் 1ஆம்தேதி 3ஆவதுடெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அவர் அணியில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல், ஷுப்மான் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (விக்கெட்கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட். ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குனெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.