ஸ்பின்னை எதிர்கொள்வதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு உதவத் தயார்
Share
இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறி வரும் நிலையில் அவர்களுக்கு உதவத் தயார் என்று முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹேடன் அறிவித்துள்ளார். இதற்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தரப்பில் என்ன மாதிரியான பதில் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்த இரு போட்டிகளில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். இந்தியாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடிந்தால் ஆஸ்திரேலிய அணியால் ஓரளவு தாக்கத்தை இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஏற்படுத்தியிருக்க முடியும். உலகில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் போட்டிகளில் 3 நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுழற்பந்து எதிர்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய அணிக்கு உதவ தயார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 100% உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன். இரவோ, பகலோ எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். சுழற்பந்து வீச்சை நீண்ட காலம் எதிர் கொண்டவன் என்ற முறையில், என்னால் நிச்சயமாக ஆஸ்திரேலிய அணிக்கு உதவ முடியும். என்று கூறியுள்ளார். இதற்கு ஆஸ்திரேலிய அணி தரப்பில் என்ன மாதிரியான பதில் வரும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.