மேய்ச்சல் தரவையினை இன்றி அல்லல்படும் மாந்தை கிழக்கு கால்நடை வளர்ப்பாளர்கள்!
Share
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு செலவபுரம் கிராமத்தில் மேய்ச்சல் தரவையினை உருவாக்கித் தருமாறு இக்கிராமத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாந்தை கிழக்கு பிரதேச பாண்டியன்குளம் , செல்வபுரம் ஆகிய கிராமங்களில் பன்னிரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உள்ள போதிலும் இதற்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாததன் காரணமாக காலபோகம், சிறுபோகம் என இரு போகங்களிலும் பயிர்ச் செய்கை நடைபெறுவதன் காரணமாக கால்நடைகளை நீண்ட தூரம் கொண்டு சென்றும் மற்றும் வீதியின் இருமருங்குகளிலும் மேய்ச்சலில் ஈடுபடுத்த வேண்டி உள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கால் நடைகளை வீதிகளில் விட்டு மேய்ப்பதினால் வாகனங்களில் மோதுண்டு கால்நடைகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கும் இக்கிராம கால் நடை வளர்ப்பாளர்கள் தமக்கான மேய்ச்சல் தரவையினை உருவாக்கித் தருமாறு கோரியுள்ளனர்.
இது தொடர்பாக மேய்ச்சல் தரவைகளை அமைத்துத் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வந்தாகவும் இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்கிக்கொண்டிருக்கும் பிரதேச செயலகமும் கால்நடை வளர்ப்பாளர்கள் மீது கரிசனை கொள்வதில்லை என தெரிவித்துள்ளனர்
இதேவேளை மேய்ச்சல் தரவையின்மையால் கால்நடைகள் பால் சுரக்கும் வீதம் குறைவடைகின்றது என்றும் தமது பொருளாதாரம் கால்நடைகளிலே தங்கியிருக்கின்றது எனவும் கவலை தெரிவிக்கின்றனர்
விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்பையும் வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த கிராமத்தில் மேய்ச்சல் தரவை அமைக்கப்படுவது அவசியமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.