வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
Share
–
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை
(மன்னார் நிருபர்)
(27-02-2023)
மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசு மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மாறாக மீனவர்களின் வாழ் வியலை சீர் குலைக்கும் நிலைக்கு இட்டுச் செல்ல கூடாது என மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இன்று திங்கட்கிழமை (27) காலை 11 மணியளவில் மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற் கொண்டனர்.
குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,மன்னார் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் இணைப்பாளர் தயாளன்,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ்,மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,,,
-மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு விதங்களில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மாவட்டத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் மன்னார் மண்ணையும்,மன்னாரில் உள்ள வளத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்களின் வாழ்வாதாரத்தையும்,மக்களின் எதிர்காலத்தை அழிக்கின்ற ஒரு செயல்பாடாக இன்றைய சூழ்நிலை காணப்படுகிறது.
காற்றாலை என்ற பெயரில் மன்னாரினுடைய தீவுப்பகுதியில் பல அழிவுகரமான செயல்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
முக்கியமாக மன்னாரில் வாழ்வாதாரத்திற்காக மீனவர்கள் கடல் தொழில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த மீனவர்களின் கடல் தொழில் நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுரூத்தல்களாக காற்றாலை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
எனவே காற்றாலை திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மன்னார் தீவு பகுதியில் இல்லாமல் மக்கள் பயன்படுத்தாத பல இடங்கள் அருகில் இருக்கின்றன.
அந்த இடங்களில் காற்றாலைகளை அமைக்கின்ற போது மீனவர்களின் பிரச்சினைகளும்,வாழ்வியல் பிரச்சனைகளும் இல்லாமல் போகும்.
நாங்கள் அபிவிருத்திக்கு தடையான வர்கள் இல்லை.எனினும் மக்களின் வாழ்வியல்,உரிமை,தொழில் பாதிக்கப்படும் வகையில் உள்ள இந்த காற்றாலை திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
-மேலும் எமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அயல் நாட்டு மீனவர்கள் எமது கடல் பகுதிக்கு வந்து எமது மீனவர்களின் வளத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.
எமது மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டு வருகின்ற நிலையில் அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டு மொத்தமாக இல்லாது ஒழிக்கும் செயலாகவே காணப்படுகின்றது.
-எனவே அரசாங்கம் மீனவர்களின் விடையத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.