LOADING

Type to search

விளையாட்டு

பும்ராவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை… ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல்

Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் ஒரு சில ஆட்டங்களை தவிர்த்து மற்றவற்றில் பங்கேற்பார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த அப்டேட் வெளிவந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக பும்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார். காயம் காரணமாக பும்ரா சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் உடல் தகுதி பெறாமல் உள்ளார்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேரடியாக பும்ரா களம் இறங்குவார் என்று பேசப்பட்டது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாடி வருகிறார். அவரை ரூ. 12 கோடிக்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது, பும்ராவுக்கு முதுகில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கேற்க மாட்டார் என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இந்தாண்டு இறுதியில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகிய முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் வகையில் முழு உடல் தகுதியை பும்ரா பெற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.