மன்னாரில் பாரம்பரிய நெல் இன அறுவடை முன்னெடுப்பு
Share
(மன்னார் நிருபர்)
02.03.2023
அழிந்து வரும் பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் கடந்த வருட இறுதியில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகை பாரம்பரிய நெல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நெற் செய்கையின் அறுவடை இன்றைய தினம் புதன்கிழமை காத்தான் குளம் பகுதியில் மெசிடோ நிறுவன ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
‘நஞ்சற்ற உணவு உற்பத்தியை’ ஊக்குவிக்கும் முகமாக முற்றிலும் இயற்கை பசளைகள் பயன்படுத்தி இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட ‘சுவடை’ என அழைக்கப்படும் பாரம்பரிய மூன்று மாத கால நெல் காத்தான்குளம் விவசாயிகளால் விதைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் மேற்படி அறுவடை இன்றைய தினம் பாரம்பரிய முறையில் இடம் பெற்றது.
எந்த ஒரு இயந்திர சாதனங்களையும் பயன்படுத்தாது பாரம்பரிய முறையில் விதைப்பு மேற்கொண்டு அருவி வெட்டி சூடு மிதித்து அனைத்தும் இயற்கையான பாரம்பரிய முறைப்படி இடம் பெற்றது.
ஏனைய செய்கைகளை விட சுவடை இன நெல் மூன்று மாத காலப்பகுதிக்குள் அறுவடைக்கு தயாராகும் என்பதுடன் தற்போது மூடை பத்தாயிரம் ரூபாய்க்கு (10.000)அதிகமான விலைக்கு கொள்வனவு செய்யப்படுகிறது.
மெசிடோ நிறுவனமானது கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாகவும் நஞ்சற்ற விவசாய செய்யையை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சீணட்டி,மொட்டைகறுப்பன்,சுவடை,பச்சைபாளை போன்ற நெல் இனங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.