LOADING

Type to search

இலங்கை அரசியல்

முழுமையான திறன் பாடசாலையாக மாற்றம் பெற்றது யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயம்

Share

மேலும் இரண்டு திறன் வகுப்றைகள் திறப்பு

யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் இன்று (01-03-2023) புதன்கிழமை மு.ப. 09:00 மணியளவில் இரண்டு நவீன திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன. இவை இப்பாடசாலையில் அமைக்கப்பட்ட ஐந்தாவது ஆறாவது திறன்வகுப்பறைகள் ஆகும். பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக Right To Read நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஐந்தாவது திறன் வகுப்பறையினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கானை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சூ.நோபேட் உதயகுமார் அவர்களாலும், இப்பாடசாலையின் பழையமாணவர்களான பிரம்ம ஸ்ரீ கணநாத சர்மா ஸ்ரீமதி ஷாருஹா (லண்டன்) தம்பதியினரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட ஆறாவது நவீன திறன் வகுப்பறையானது (Smart Panel) பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பொ.ரவிச்சந்pரன் அவர்களாலும் திறந்து வைக்கப்பட்டது.

ஆறாவது திறன் வகுப்பறையின் நினைவுப் பலகையை கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட வித்தியாலயத்தின் பழையமாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ ச.லம்போதரகுமாராசாமி குருக்கள் அவர்கள், அமைத்துக் கொடுத்தவர்களின் சார்பில் திரைநீக்கம் செய்து வைத்ததோடு வைபவ ரீதியாக இயக்கியும் வைத்தார். அத்துடன் இத்திறன் வகுப்பறைக்குரிய உள்ளக வசதிகளையும் அவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதம விருந்தினர், எமது வலயத்தில் சகல வகுப்புக்களும் திறன் வகுப்பறைகளாக அமையப்பொற்ற முதலாவது திறன் பாடசாலையாக இப்பாடசாலை திகழ்கின்றது என கூறியதோடு இப்பாடசாலைச் சமூகம் கல்வி உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் கூறினார்.

அத்துடன் வித்தியாலய அதிபர் தனது தலைமையுரையில், யாழ். மாவட்டத்தில் முழுமையான முதலாவது திறன் பாடசாலையாக இப்பாடசாலை மாற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியுள்ளதாகவும் இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்திற்கும் கல்வி அதிகாரிகளுக்கும் நன்றி கூறினார். உலகில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்குத் தேவையான நவீன தெழிநுட்பத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் எதிர்கால உலகிற்கு ஏற்ற மாணவர்களை உருவாக்க முடியும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.