LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கில் வரலாற்று ஆலயங்கள் ’அழிக்கப்பட்டு’ ஜனாதிபதிக்கு மாளிகை

Share

(கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை)

யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் வடக்குப் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களை இடித்து அழித்து அந்த இடத்திலேயே ஜனாதிபதிக்கு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

கனடா உதயனின் புலனாய்வுகளில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது

கீரீமலையில் மிகப் பழமை வாய்ந்த சிவன் ஆலயம், சடையம்மா மடம், கதிர்காமத்திற்கு யாத்திரை ஆரம்பிக்கும் முருகன் ஆலயம் என்பன அமைந்திருந்த இடங்கள்  முழுமையாக இடித்து அழிக்கப்பட்டே மகிந்தவின் காலத்தில் அவருக்கு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ளது எனப் பலரும் குற்றம் சாட்டியபோதும் அதனை ஆவண ரீதியில் நிரூபணம் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது அது நிரூபணம் செய்து  வெளிவந்துள்ளது

வலி. வடக்கு கீரிமலை பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அருகே  கிருஸ்ணன் ஆலயம் ஒன்றும் இருந்தது. இந்த ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலர் அண்மையில்  கடற்படையினரின்  பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு கிருஸ்ணர்  ஆலயத்தின் தற்போதைய நிலையைக் காண்பித்துள்ளனர்

கிருஸ்ணர்  ஆலய நிர்வாகத்தினர் 1990ஆம் ஆண்டின் பிற்பாடு, முதல் தடவையாக இந்த ஆலயத்தைச் சென்று  பார்வையிட்டுள்ளனர். ஆலயத்தைச் சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலனசபையினருடன் அப்பகுதி கிராம சேவகரும் பயணித்துள்ளார்

கிருஸ்ணர் ஆலயப்  பகுதியை பார்வையிட்டு ஏங்கியவர்கள் எதிர் திசையை திரும்பி  பார்வையிட்டபோது பேரிடியுடன் அதிர்ச்சி அடைந்து விட்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் ஆலயம் இருந்த தடயமே தெரியாது இடித்து அடியோடு அழிக்கப்பட்டே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் உல்லாச விடுதி அமைத்துள்ளனர்

அங்கு சென்று திரும்பிய கிருஸ்ணர் ஆலய  பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா  ஆலய நிலை தொடர்பில் தனது கருத்துக்களை மிகவும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.  

”ஆலயத்தின் வசந்த மண்டபம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் மட்டுமே அங்கு  உள்ளன. அதேபோல்  ஆலய விக்கிரகங்களில் பிள்ளையார், முருகன் என்பனவற்றை காணவில்லை”.

அங்கு ஒரு சில பழங்கால விக்கிரகங்கள் மட்டுமே எஞ்சியவை உள்ளதாகவும் ஆனால் அதைக்காட்டிலும் அருகிலிருந்த கோவிலின் தடயமே இப்போது இல்லை என்று கூறினார்.

”கிருஸ்னர் கோவில் அருகில் இருந்த  பழமைவாய்ந்த சிவன் ஆலயமும் அங்கேயிருந்த சிவலிங்கமும்  முழுமையாகக் காணவில்லை. அந்த இடம்வரை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளதனால் அவை இடித்து அழிக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது. இதே போன்று கதிரை ஆண்டவர் ஆலயமும் அதன் அருகே இருந்த சடையம்மா மடத்தையும் இப்போது காண முடியவில்லை. அவை இருப்பதாகவும்  தெரியவில்லை” என்றார்.

எனினும் கிருஸ்ணன் ஆலயத்தை விரைவில் விடுவிப்பதாக இராணுவத்தரப்பிலிருந்து தமக்கு வாக்குறியளித்துள்ளனர் எனவும் கூறினார்

சிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளமை தொடர்பில் சிவதொண்டராற்றி வரும் அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயார் ஆரு.திருமுருகனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் என்ன நிலைமை எனக் கேட்டேன்.

”இங்கு போர்த்துக்கீசர் காலத்து ஆதிசிவன் ஆலயத்தில்  பாதாள கங்கை எனப்படும் கிணற்றுடன் கூடிய சிவன் ஆலயம், அதன் அருகே சித்தர்களின் தியான மடம், அதிலே நல்லூர் தேரடிச் சித்தரான சடையம்மாவின் சமாதி மற்றும் அவரது மடம் ஆகியவையும் இருந்தன”

அது மட்டுமின்றி அந்த பிரதேசமே இந்துக்களின் புனித பூமியாக திகழ்ந்ததற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன என்ற அவர் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

”நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குரு சங்கர சுப்பையாவின் சமாதி  ஆகியவையும் அங்கே இருந்தன. அதேபோன்று மிகவும் பழமையான கதிரை ஆண்டவர் ஆலயமும் இருந்தது.  இவ்வாறான ஆண்மீக அடையாளங்கள் அனைத்தும்  அழிக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளதுஇவற்றை மீள அமைத்தே ஆக வேண்டும் என்பதோடு அவற்றினை அழித்தமைக்கும் எமது வன்மையான கண்டனங்களையும் நாம்  பதிவு செய்கின்றோம்” என்றார்

இவற்றின் அருகே இருந்த மற்றுமோர் சைவ ஆலயமான சோலை வைரவர்  கோவில் இருந்த சமயம் அதற்கு பூசகராக இருந்த ந.பரமேஸ்வரன் தற்போது திருநெல்வேலியில் வசிக்கின்றார். இந்த ஆலயம் தொடர்பான விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார். 

”1952ஆம் ஆண்டு சீமேந்து ஆலை அமைக்கும்போது காணிகள் கொள்வனவு மற்றும் சுவீகரிப்பில் ஈடுபட்டபோது எமது ஆலயப் பகுதியினையும் சுவீகரிக்க முற்பட்டனர். அதன்பின்பு மேலும் விஸ்தரிக்க முனைந்த சமயம் 1960ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பிற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் ஆலய முகாமையாளர் சரவணமுத்து வழக்கு தொடுத்தார். இதற்கு பேராசிரியரும் சட்டத்தரணியுமான சுந்தரலிங்கம் ஆஜராகி வென்றபோது வணக்கஸ்தலத்தில் கை வைக்ககூடாது என அன்றே நீதிமன்றம் உத்தரவிட்டதனால் ஆலயம் அன்று தப்பிப் பிழைத்த நிலையில் இன்று அந்த ஆலயம் இருக்கிறாதா இல்லையா என்பதனைக் கூட அறிய முடியவில்லை” என்றார்

இதேநேரம் இப்பகுதியில் அமைந்திருந்த கதிரை ஆண்டவர் ஆலயத்தின் மதகுருவாக இருந்த 71 வயதான  கிருஸ்ணமூர்த்திக் குருக்கள் கணேசமூர்த்தி சர்மாவை தேடி இது தொடர்பான விபரங்களை கேட்டேன்

”கதிரைமலை முருகன் ஆலயத்திற்கு எனது குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையாக நான் பூசை மேற்கொண்டு வந்தேன். இந்த ஆலயத்தின் மூல மூர்த்தியாக வேலே இருந்து வந்தது. பண்டயகால சிற்ப முறையிலே அமைக்கப்பட்ட ஆலயம் இது. அதனோடு குருக்கள் தங்குமிடம், மடப்பள்ளி மட்டுமன்றி 3 கேணிகள் ஒன்றாக காணப்பட்ட வரலாறும் உண்டு. அதேநேரம்  இந்த ஆலயம் கடற்கரையோடு ஒட்டியிருந்த போதும் இந்த ஆலயத்திற்கு அப்பால் இருந்த கிணற்று நீரே உவராக இருந்தது. எனினும் ஆலயத்தின் கேணியிலிருந்த நீர் நன்னீராகவே இருந்ததால் அயலவர்களின் பாவனைக்கும் பெரிதும் உதவியது. இந்தப் பிரதேசம் அனைத்து சைவ மரபுகளோடு இருந்தமையால் திருச்செந்தூரை ஒத்த வடிவில் அமைக்க கனவு கண்டோம் அது வெறும் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. ஏனெனில் இந்தப் பிரதேசம் மீண்டும் விடுவிக்கப்படுமா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமும் அவை இருக்கின்றனவா இல்லையா என்ற அச்சம் மறுபுறமும் எம்மை சூழ்கின்றது”.

தான் பூசை செய்த ஆலயத்தைச் சென்று பார்வையிட முடியாத நிலை குறித்து  மிகவும் வருந்திய ஐயாவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைக் காண எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அந்த மண் மற்றும் இறைவனின்பால் அவர் வைத்திருந்த பற்றும் நம்பிக்கையும் அவரது குரலில் எதிரொலித்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.

”இப்பகுதியை விடுவிப்பதற்கு முன்பு எனது ஆயுள் காலத்திலேயே ஒரு தடவையேனும் அந்த இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்வையிட வேண்டும் அதற்கு இறைவன் அருள்புரிந்திட வேண்டும்” என்றார்

இவ்வாறான வரலாற்று சரித்திரம் மிக்க 7 சைவ (ஆலய) அடையாளங்களை அழித்தே ஜனாதிபதிக்கு 30 ஏக்கரில் ஆடம்பர மாளிகை அமைத்தனர். இன அழிப்பை மட்டுமல்ல எமது நாட்டின் கலை, கலாச்சாரத்தையும் அழித்தனர் தற்போதும் அழிக்கின்றனர் என்பதற்கு அடையாளமாகவே இந்த உண்மைகள் சான்று பகிர்கின்றன

இந்த வரலாற்றுச் அடையாளங்களை அழித்து ஜனாதிபதி மாளிகை அமைக்கும்போது சிலர் எதிர்த்து குரல் கொடுத்தாலும் பலர் ஏன் குரல் எழுப்பவில்லை என வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனைத் தொடர்பு கொண்டு வினவினேன்.

”இந்த ஜனாதிபதி மாளிகையை 2013ஆம் ஆண்டிற்கு முன்பே இரகசியமாக  அமைத்துவிட்டனர். இந்த மாளிகை அமைக்கப்படும் காலத்தில் எமது மக்களையோ மதகுருமார்களையோ, ஆன்மீக ஆர்வலர்களையோ தெல்லிப்பளைச் சந்திக்கு அப்பால் செல்ல படையினர் அனுமதிக்கவில்லை”.

அந்த காலகட்டத்தில் கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆலயத்திற்கு நித்திய பூசைக்குச் செல்வதற்கு குருக்களிற்கு கூட பிரச்சனைகள் இருந்தன என்கிறார் சுகிர்தன்.

 ”ஜனாதிபதி மாளிகை அமைக்க அங்குள்ள புராதன சிவன் மற்றும் இதர இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டன அல்லது இல்லாது ஆக்கப்பட்டன என்பது உண்மை. ஏன்? கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கான நித்திய பூசைக்காக செல்வதற்கு குருக்களும் நிர்வாகமும் பெரும் பிரச்சனைகளை சந்தித்தனர். அதேவேலை அவர்களுடன் இணைந்து நாமும் பல முயற்சிகளை மேற்கொண்டோம்” என்றார்

இவையெல்லாம் இவ்வாறு இருக்க 2012 ஆம் ஆண்டு மக்களினதும் வரலாற்றுச் சின்னங்களும் இருந்த 29.1 ஏக்கர் நிலத்தை மகிந்த ராஜபக்ச காலத்தில் அபகரித்து கட்டிய இந்த ஜனாதிபதி மாளிகையை மீள மக்களிடமே கையளிக்குமாறு கோரிய போதும் அது இடம்பெறாத நிலையில் 2021-09-09 அன்று 2244/21 இலக்க அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அக்கட்டிடத்தினையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பாவனைக்கு கையளிப்பதாக பிரகடணப்படுத்தப்பட்ட போதும் அக்கட்டிடம் இன்று வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இவ்வாறு அரச வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவித்தல் வழங்கவோ அல்லது தமது சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளவோ இல்லை என நில உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் இந்த விடயம் தொடர்பில் மேலும் தேடியவேளை 2019ஆம் நில அளவைத் திணைக்களம் வரைந்த ஓர் வரைபடம் கிட்டியது. அந்த வரைபடத்தில் சடையம்மா மடம் என அடையாளம் இடப்பட்டுளதன் மூலம் 2019ஆம் ஆண்டும் சடையம்மா மடம் இருந்தமை உறுதி செய்யப்படுவதனால் தற்போது அங்கே அந்த மடம் உண்டா, இல்லையா என்பதும் மிகப் பெரும் கேள்வியாகவுள்ளது. 

சிவன் சொத்து குலம் நாசம் என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளார்களா என்பது அந்த ஈசனிற்கே வெளிச்சம்!