இலங்கையில் : ‘அரசியல் சுனாமியா’? அல்லது ‘புள்ளடி புரட்சியா’?
Share
வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- ரணில் – ராஜபக்ஷ ஆட்சிக்கு தேர்தல் சிவப்பு விளக்கு
- தேர்தல் நடந்தால்? பெரும்பான்மை கேள்விக் குறி?
இலங்கை தற்போது தாச்சியில் இருந்து அடுப்பில் விழுந்த நிலையில் உள்ளது.அடுப்பில் விழுந்த நிலையில் தென்னிலங்கை மக்கள் தமக்கான தலைமையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்
தந்தை செல்வநாயகம் தமிழ் மக்களின் தலை விதியை நிர்ணயிக்கும் பயணத்தில் நம்பிக்கையிழந்த நிலையில் ‘தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்‘ என்று தெரிவித்தார். அந்த ஒரு நிலைக்கு தென்னிலங்கை இன்று வந்துள்ளது.
இந்த ஒரு பின்னணியில் தென்னிலங்கை தமக்கான தலைமையைத் தேடிக் கொண்டிருக்கின்றது.
- மக்கள் எழுச்சி
ஆட்சி அதிகாரத்தில் ரணில் – ராஜபக்ஜ ஆளும் வர்க்கம். இந்த ஆளும் வர்க்கத்திற்கெதிராக மக்கள் ஓரணியில் நிற்கின்றனர். கடந்த ஆண்டு மக்கள் எழுச்சிகள் எழுந்தன. பொதுமக்களின் வெறுப்பு ஆரம்பத்தில் தலைவர் இல்லாத எதிர்ப்புகளாக வெடித்தது.
நாட்டை திவாலாக்கிய ராஜபக்ச க்களின நிர்வாகத்தை நிறுத்துமாறு மக்கள் கோரினர்.வீதியில் இறங்கி போராடினர்.
அவர்களுக்குக் கிடைத்திருப்பது ராஜபக்சக்களின் ஆட்சியின் நீட்சிதான்.
ஆனால் கடந்த ஆண்டு மக்கள் எழுச்சிகளுக்கு வழிவகுத்த அனைத்து அரசியல்–பொருளாதார காரணிகளும் கவனிக்கப்படாமல் உள்ளன;
பொருளாதார முறைகேடு, ஊழல், விரயம், அதிகார துஷ்பிரயோகம், பொருளாதார கஷ்டங்கள், தண்டனையிலிருந்து விலக்களிக்கும்
கலாச்சாரம், சட்டத்தின் ஆட்சி சரிவு மற்றும் பொது நிதி திருட்டு ஆகியவை அப்படியே மாற்றமின்றி தொடர்கின்றன.
நாட்டின் திவால்நிலைக்கு மக்கள்தான் காரணம் எனப் பேசுகிறார்கள்!
- பிளவுபட்டு நிற்கும் எதிர்க்கட்சிகள்
SJB, JVP தலைமையிலான NPP, SLFP மற்றும் SLPP அதிருப்திக் குழுக்கள் என எதிர்க் கட்சி வரிசையில் நிற்பவர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருக்கின்றன. ராஜபக்ச–விக்ரமசிங்க ஆட்சிக்கு, பிளவுபட்டு நிற்கும் எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு சாதகமாக உள்ளது.
- இன்னொரு ‘அரகலயாவை’ நோக்கிய காத்திருப்பு.
மக்களின் கோபத்தை எவ்வாறு தத்தமது அரசியல் நலன்களுக்காக அறுவடை செய்து கொள்வது என்பதில்தான் தென்னிலங்கை அரசியல் சக்திகள் முனைப்புக் காட்டுகின்றன. பொது எதிரிக்கு எதிரான கூட்டுச் செயற்பாட்டை தென்னிலங்கையின் அரசியல் களத்தில் காண முடியாதிருக்கின்றது. பொது மக்களைப்போன்று தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இன்னொரு ‘அரகலயாவை‘ ஆவலுடன் எதிர்பார்த்துக் காய்களை நகர்த்துவதாகவே உள்ளது.
இந்த போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு நிகராக எதையும் SJB அல்லது JVP அல்லது முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (FSP) அல்லது வேறு எந்த எதிர்க்கட்சியாலும் செய்ய முடியவில்லை.
- ஜேவிபியும் சஜித் அணியும் பிரிந்து நின்று அறுவடைக்குக் காத்திருக்கின்றன.
எஸ்.ஜே.பி தலைவர் சஜித் பிரேமதாசவும், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் ஒன்றுபட்டால், வீழ்வோம் , பிரிந்தால் தாங்கள் நிலைத்து நிற்கலாம் என்ற மாயையில் உழைக்கின்றனர். அவர்களின் அரசியல் சண்டைகள் SLPP மற்றும் UNP க்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தியுள்ளன.
- ரணில் விக்ரமசிங்க
ஐ.தே.க. தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்ஷக்களையும் அவர்களது அணியினரையும் காப்பாற்றுவதுடன் 2020ல் அவரையும் அவரது கட்சியையும் முற்றிலுமாக நிராகரித்ததற்காக நாட்டைப் பழிவாங்குவதும் தண்டிப்பதும்தான் அவரது நிகழ்ச்சி நிரலின் முதன்மையானதுமாக உள்ளது என்பதே நாட்டு மக்களின் அபிப்பிராயமாக உள்ளது.
- ஐ.தே.க.வுக்கான சவக்குழி
ரணில் விக்ரமசிங்க ஐ.தே.கட்சிக்கான சவப் பெட்டிக்கான இறுதி ஆணியையும் அடித்து விட்டார்.ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனது அரசியல் பயணத்தை படுகொலை செய்து விட்டதாக கூறினார்.ஆனால் நல்லாட்சி காலத்தில் மீட்டுக் கொண்ட அந்த அரசியல் ஆயுளை அவரே கல்லறைக்கு இழுத்தச் சென்றார் என்பது பதிவுகளாக உள்ளது.
ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்று மேலெழ சந்தர்ப்பம் இருந்தபோதும் ராஜபக்சக்களின் அணியினரைக் காப்பாற்றும் அதேவேளை இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கத்தின் மீட்பராக பாத்திரம் ஏற்றுள்ள நிலையில் எதேச்சதிகாரத்தின் எஜமானாக தன்னை உருவகித்துக் கொண்டுள்ளார். மொத்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ராஜபக்ஷக்களுடன் இணைந்து தனது அரசியல் பயணத்திற்கு மாத்திரமல்ல ஐ.தே.கட்சியின் அரசியல் பயணத்திற்கும் முடிவுரை எழுதிக் கொண்டிருக்கின்றார்.
- தேர்தல் வெற்றி கானல் நீரே!
ஐ.தே.கவோ அல்லது ராஜபக்ஷக்களோ முறையான தேர்தல் மூலம் மீண்டெழுவது கானல் நீராகும். எனவேதான் SLPP-UNP கூட்டணி,தேர்தல்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சியில் உள்ளது.
உள்ளூராட்சி, மாகாண அல்லது தேசியத் தேர்தல் எதுவாக இருந்தாலும் அது விக்கிரமசிங்க – ராஜபக்சே ஆட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் குறிப்பாக பெரும்பாலான பதவியில் இருப்பவர்கள் அறிவார்கள்.
- ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்
தேர்தலை கண்டு அஞ்சி நாசவேலையில் ஈடுபடும் அரசாங்கத்தை விட ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டாலோ அல்லது தேர்தல் இரத்துச் செய்யப்பட்டாலோ எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தல்களோ நடைபெறுவதற்கான வாய்ப்புக்களும் மறுக்கப்படலாம்.
- நாடாளுமன்ற சிறப்புரிமைபற்றி போசுகின்றனர்.
தற்போது தேர்தலை ஒத்திவைப்பதற்காக நீதிமன்ற தீர்ப்பினை சவாலுக்குற்படுத்தும்வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமைபற்றி போசுகின்றனர். மொத்தத்தில் அதிகார போதையில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அதிகாரத்துவ அடியாட்களின் கைகள் ஓங்கியுள்ளன.
தற்போதைய நிலையில் நீதி மன்றம் சில தீர்வுகளை வழங்கும் நிலையில் உள்ளது.ஆனால் ஒட்டு மொத்த தீர்வுக்கும் உடனடியாக தீர்வினை வழங்கும் நிலையில் நீதி மன்றங்களில் தங்கி நிற்பதானது நீண்ட கால காத்திருப்புகளுடன் தொடர்புடையது.
எனவேதான் ரணில் – ராஜபக்ஷ ஆளும்தரப்பு மக்களை வீதியில் நாளாந்தம் இறங்க வைத்துள்ளதுடன் அவர்களை பொலிஸ் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்குமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
- பொலிசார் தடைகளைப் பெற்று தடுத்து வருகின்றனர்.
மக்கள் வீதியில் இறங்கிப் போராட முடியாதவகையில் நீதிமன்றங்களுக்கூடாக பொலிசார் தொடர்ச்சியாக தடைகளைப் பெற்று போராட்டங்களை தடுத்து வருகின்றனர்.
மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் வேறுபாடுகளைமறந்து ஆத்திரமடைந்த பொதுமக்களுக்கு நம்பிக்கையுடனும் தேர்தலை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை தகர்த்தெறிய வேண்டும்.
- தேர்தல் நடந்தால்? பெரும்பான்மை கேள்விக் குறி?
இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) வெற்றிபெற வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும்,எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது என்று உள்ளூர் குழுவின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இலங்கையின் சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி ஜே.வி.பி (32%) மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) (31%) மக்களின் ஆதரவைப் பெறும் நிலையில் உள்ளதாக வெளிப்படுத்துகின்றன. UNP 9% உடன் பின்தங்கியுள்ளது, மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 8%க்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
வரலாற்று ரீதியாக,ஜே.வி.பியின் பேரணிகளுக்குள் ஈர்க்கப்பட்ட பாரிய கூட்டங்கள் வாக்குகளாக மாற்றப்படவில்லை. ஏனெனில் அந்த பேரணிகள் நாட்டின் மூலை முடுக்கிலிருந்து கட்சி தொண்டர்களை ஒன்றுதிரட்டியதால் உருவாகிய கூட்டங்களாகவே அமைந்தன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்கள் ஆதரவாக வாக்களிக்கும் மன நிலைக்கு திரும்பியுள்ளதாகவே கள நிலவரம் காட்டி நிற்கின்றது.
இருப்பினும் இந்த முறை பொது மக்களின் மனநிலை UNP, SLPP மற்றும் SLFP (இது 1% உடன் அடிமட்டத்தில் நலிந்துள்ளது) ஆகியவைவற்றுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது.
SJB மக்களின் இந்த மனமாற்றத்தை வென்றெடுக்கத் தவறியுள்ளது.. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில், சஜித் பிரேமதாச 42% மக்கள் வாக்குகளைப் பெற்றபோது இருந்த அதன் மக்கள் ஆதரவு தற்போது குறைந்துள்ளது.
- மக்கள் புள்ளடிக்குள் புரட்சி செய்ய காத்திருக்கின்றனர்.
இன்னும்இ நாடு வாக்களிப்பதற்கு முன்பு நிறைய நடக்கலாம்; வாக்காளர்கள் மனநிலை ஊசலாடுகிறார்கள். முடிவெடுக்காத வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். இருப்பினும், முந்தைய வழமையான வாக்களிக்கும் முறைக்கு மக்கள் திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.ஏனெனில் தென்னிலங்கை மக்கள் புள்ளடிக்குள் புரட்சி செய்ய காத்திருக்கின்றனர்.இதுவே ரணில் – ராஜபக்ஷ அணியினரைக் கிலி கொள்ளச் செய்துள்ளது.
- களியாட்ட கிரிக்கட்
இந்த ஒரு நிலையிலும் நாட்டை இன்னொரு எரிமலையின் மீது தூக்கி நிறுத்தியுள்ள ஆட்சியாளர்கள் களியாட்ட கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நாடு மாத்திரமல்ல உண்மையில் அவர்களும் எரிமலையின் மீதே அமர்ந்துள்ளனர் என்பதை மறந்துவிட்டனர்போலும்.
- மற்றொரு சுனாமி
பொதுமக்களின் கோபத்தின் மற்றொரு சுனாமி உருவாகுவதற்கான அறிகுறிகள்; மறைந்துவிட்டதாக எண்ணி ஆளும்தரப்பினர் களியாட்ட கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடலாம். ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஒரு அநாதையாக நிற்கும்வரை அதற்கு எவரும் பொறுப்பேற்று தீர்வு காணாதவரை மக்களின் கோபமோ எழுச்சியோ அடங்கியதாக அர்த்தப்படாது. அது இன்னொரு சுனாமியாக மீண்டும் மேல் எழும்பும். . மேலும் அது முழு நாட்டையும் குழப்பத்தில் மூழ்கடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.