சுய தொழில் முயற்சியாளர்கள் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Share
-கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர்
(மன்னார் நிருபர்)
(16-03-2023)
சுய தொழில் முயற்சியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கும் சுயதொழில் பயிற்சிகளில் பங்கு கொள்ளுகின்றவர்கள் தமது இலக்கை உரிய முறையில் அடைந்து கொள்ள வேண்டும் என இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் தெரிவித்தார்.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும்,மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த உற்பத்தி சார் பயிற்சி நெறியின் 2 ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்றைய தினம்(16) வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
குறுகிய காலத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் சுயதொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் சுய தொழில் ஊக்குவிப்பு மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனைக்கு அமைவாக ஆரம்பத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி இருந்தோம்.
அதன் 2 ஆம் கட்டமாக கைத்தொழில் ஒன்றை உருவாக்கி அதனுடாக எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு முதல் கட்டமாக சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த உற்பத்தி சார் பயிற்சி நெறியை முன்னெடுத்து வருகிறோம்.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நான்கு நாட்கள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே உங்களின் சுய தொழில் முயற்சிகளை மேம்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எதிர் காலத்தில் சிறந்த சுய தொழில் முயற்சியாளர் அல்லது வளவாளராக வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் உங்களுக்கு சகல விதமான ஆலோசனைகள் வழங்கப்படும்.குறிப்பாக உற்பத்தி,உற்பத்தியின் பின் பொதியிடல்,சந்தைப்படுத்தல்,பதிவு செய்தல் ஆகியவை தொடர்பில் சிந்திக்கத் தேவையில்லை.
எமது அலுவலகர்கள் ஊடக உங்களுக்கு வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்படும்.எனவே கலந்து கொண்டுள்ள அனைத்து பயிற்சியாளர்களும் உரிய முறையில் உங்கள் சுய தொழில் முயற்சிகளை முன்னெடுத்து பயணடைந்து கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சுய தொழில் உற்பத்தி சார் பயிற்சி நெறியின் போது மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.